தமிழக டெல்டா பகுதிகளில் வரும் 11ம் தேதி முழு அடைப்பு அறிவிப்பு!
டெல்டா மாவட்டங்களில் வரும் 11ம் தேதி முழு அடைப்பு என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டம்
கர்நாடகா மாநிலத்தில், பருவ மழை போதுமான அளவு வராமல் போனதால் அங்குள்ள அணைகள் முழுமையாக நிரப்பப்படவில்லை. இதனால் கர்நாடகா மற்றும் தமிழகம் இடையே காவிரி நீரை பங்கிடுவது தொடர்பாக பிரச்சனை எழுந்தது. காவிரி மேலாண்மை ஆணைய உத்தரவின்பேரில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
இதனை கண்டித்து கர்நாடகாவில் உள்ள விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக காவிரியின் மையப்பகுதியான மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள், கன்னட அமைப்பினர் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர்.
முழு அடைப்பு
இந்நிலையில், கர்நாடக முதல்வர் மற்றும் பல அரசியல் தலைவர்களும், காவிரியில் தண்ணீர் திறக்கப்படுவதை தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். மேலும் காவிரி மேலாண்மை ஆணையம் தொடர்ந்து தண்ணீர் திறக்கக்கூடாது என்று கூறிவருகின்றனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் அரசியல்வாதிகள் மற்றும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்பொழுது, காவிரியில் தண்ணீர் திறக்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்து டெல்டா மாவட்டங்களில் வரும் 11ம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கர்நாடகா அரசு மற்றும் கர்நாடகா மாநில பாஜகவை கண்டித்து மத்திய அரசு அலுவலகத்தின் முன்பு போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.