கழிவறையில் ரகசிய கேமரா; பல பெண்களின் போட்டோ, வீடியோக்களை விற்ற மாணவி!
கேமரா வைத்து பெண்களின் போட்டோ, வீடியோக்கள் விற்கப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ரகசிய கேமரா
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். அங்கு பயிலும் மாணவ, மாணவிகளின் வசதிக்கு ஏற்ப பிரத்யேக விடுதிகளும் செயல்பட்டு வருகின்றன.
இந்த நிலையில்,கல்லூரியில் உள்ள மகளிர் விடுதியில் கழிவறையில் ரகசியமாக ஸ்பை கேமரா பொருத்தப்பட்டுள்ள விவரம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை அளித்துள்ளது. கேமரா விவகாரம் மாணவிகள் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பயதால் அவர்கள் அனைவரும் நள்ளிரவில் திடீரென விடுதியில் போராட்டத்தை நடத்தினர்.
இது தொடர்பாக கல்லூரி நிர்வாகத்திடம் அவர்கள் புகார் அளித்தும் எந்த அடவடிக்கையிம் எடுக்கவில்லை என கூறப்படுகிறது. மாணவிகள் போராட்டம் பற்றி தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
விற்ற மாணவி
பிறகு இந்த விவகாரத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் விடுதி மாணவி ஒருவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதில், தமது ஆண் நண்பர் விஜய்குமார் என்பவருடன் இணைந்து அவர் இதனை செய்ததாகவும், போட்டோக்கள், வீடியோக்களை பதிவு செய்து,
ஆண்கள் விடுதியில் உள்ள 'சபல' மாணவர்களிடம் விற்று காசாக்கியதும் தெரிய வந்துள்ளது. முதற்கட்ட விசரணையில், ஏறத்தாழ 300க்கும் மேற்பட்ட போட்டோக்கள், வீடியோக்கள் விற்கப்பட்டுள்ளதை கண்டு மாணவிகள் அதிர்ந்து போயுள்ளனர்.
இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் அதே கல்லூரியில் படிக்கும் மாணவர் விஜய்குமார் என்பவரை உடனடியாக கைது செய்துள்ள போலீசார், அவரிடம் இருந்து லேப்டாப், செல்போன் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த சூழலில், சந்தேகிக்கப்படும் அந்த கல்லூரி மாணவி, பிரபல அரசியல் கட்சி பிரமுகரின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது.