ஹோம் டூர் போட்ட யூடியூபர் - வீட்டை கொள்ளையடிக்க முயன்ற சப்ஸ்கிரைபர்!
இளைஞர் ஒருவர் யூடியூபர் வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
யூடியூபர்
கோவை குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் சுஹைல் (29). இவர் `சுஹைல் விலாகர்’, `சைபர் தமிழா’ என்ற யூடியூப் சேனல்களை நடத்திவருகிறார். சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சப்ஸ்கிரைபரை கொண்டுள்ளார். இவரின் மனைவி பாபினா (28). இவர்களுக்கு 1 பெண் குழந்தை உள்ளது.
கே.ஜி சாவடி பிச்சனூர் பகுதியில் ஒரு புதிய வீடு கட்டி குடிபெயர்ந்திருக்கின்றனர். வீட்டில் நடக்கும் அன்றாட குடும்ப நிகழ்வுகளை வீடியோவாக வெளியிட்டுவந்திருக்கிறார். அதில் யூடியூப் மூலம் கிடைக்கும் வருவாயில் தான் சொந்த வீடு, 2 கார்கள், மற்றும் இரு சக்கர வாகனங்களையும் வாங்கி வசதியாக வாழ்ந்து வருவதாக தெரிவித்துள்ளார்.
கொள்ளை முயற்சி
இந்நிலையில், காலை 6 மணிக்கு சுஹைலின் வீட்டுக் கதவை தட்டும் சத்தம் கேட்டது. திறந்து பார்த்ததில் மர்ம நபர் ஒருவர் கத்தி வைத்து மிரட்டி நகை, பணத்தை கேட்டுள்ளார். தொடர்ந்து சுஹைல் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அந்த நபரை மடக்கி பிடித்து போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பின் கைது செய்து விசாரித்ததில், பிடிபட்ட நபர் புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த அனுராமன் (25) என்பது தெரியவந்தது. “நான் சுஹைல் யூடியூப் சேனலின் சப்ஸ்க்ரைபர். அவர் மிகக் குறுகிய காலத்தில் யூடியூப் மூலம் அதிக பணம் சம்பாதித்திருக்கிறார்.
அதை மிக எளிதாகச் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் புதுச்சேரியிலிருந்து வந்தேன். நள்ளிரவு சுஹைலின் வீட்டை அடைந்துவிட்டேன். இரவு முழுவதும் மொட்டை மாடியிலேயே படுத்துத் தூங்கி காலையில் வீட்டுக்குள் சென்றேன்” எனத் தெரிவித்துள்ளார்.