ஒருமையில் பேசிய டாக்டர் கிருஷ்ணசாமி.. பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- செய்தியாளர் சந்திப்பில் நடந்தது என்ன?
அரசியல் அரங்கில் தன்னை முக்கிய தலைவராக கருதி கொள்ளும் மருத்துவர் கிருஷ்ணசாமி, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையை பேசி இருப்பது அவரது முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுவதாக கோவை பத்திரிகையாளர் மன்றம் குற்றம்சாட்டியுள்ளது.
கிருஷ்ணசாமி
இதுதொடர்பாக கோவை பத்திரிகையாளர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது புதிய தமிழகம் கட்சி தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி செய்தியாளர் சந்திப்பு கோவையில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) நடைபெற்றது. அப்போது அவரிடம் இட ஒதுக்கீடு தொடர்பான கேள்விகளை செய்தியாளர்கள் எழுப்பினர்.
அப்போது அவர் பேசிய பேச்சு ஆபாசமாக இருந்த நிலையில் அங்கிருந்த சக செய்தியாளர்கள் கிருஷ்ணசாமியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் செய்தியாளர்கள் சந்திப்பின்போது பரபரப்பு ஏற்பட்டது.
அரசியல் அரங்கில் தன்னை முக்கிய தலைவராக கருதி கொள்ளும் மருத்துவர் கிருஷ்ணசாமி, அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையை பேசி இருப்பது அவரது முதிர்ச்சியற்ற தன்மையை காட்டுகிறது.அவரது இந்த பேச்சு பத்திரகையாளர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
பத்திரிகையாளர் மன்றம்
தனது அரசியல் சுயலாபங்களுக்காக சக அரசியல் தலைவர்களிடம் தனது கொள்கைகளையும், சுயமரியாதையையும் அடகு வைப்பதை அவர் பெருமிதமாக நினைக்கலாம். ஆனால் பத்திரிகையாளர்கள் பொதுவெளியில் தங்களின் கண்ணியம், சுயமரியாதையை விட்டுக்கொடுக்க ஒரு போதும் தயாராக இல்லை என்பதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இதற்கு முன்பும் மருத்துவர் கிருஷ்ணசாமி இதேபோல் செய்தியாளர் ஒருவரின் சாதிய பின்புலத்தை ஆராய்ந்து அதற்காக கடும் கண்டனத்தை சந்தித்திருக்கிறார். யாகாவாராயினும் நாகாக்க என்ற வள்ளுவரின் சொல்லை அவர் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை என்று இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.
கோவை மாவட்டத்தின் மூத்த பத்திரிகையாளராகவும், சமூக அக்கறை கொண்டவராகவும் இருந்து வரும் குருசாமியிடம், அச்சில் ஏற்ற முடியாத வார்த்தையை பேசிய மருத்துவர் கிருஷ்ணசாமி பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.