காரை மறித்து சுத்தியால் தாக்கிய கொள்ளையர்கள் - கோவையில் பயங்கர சம்பவம்!
நெடுஞ்சாலையில் நள்ளிரவு நடந்த வழிப்பறி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை முயற்சி
கேரளா, எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் அஸ்லாம் சித்திக் (27). விளம்பர ஏஜென்சி நடத்தி வருகிறார். இந்நிலையில் அஸ்லாம் சித்திக் தன் நண்பர்களுடன் பெங்களூர் சென்றுள்ளார்.
தொடர்ந்து, அங்கு கணினி மற்றும் உதிரி பாகங்களை வாங்கிவிட்டு, கோவை வழியாக கேரளா திரும்பியுள்ளனர். அப்போது கோவை மதுக்கரை அருகே தேசிய நெடுஞ்சாலையில் நள்ளிரவு 2.30 மணியளவில், 2 இனோவா கார்களில் முகமுடி அணிந்து வந்த 6 மர்ம நபர்கள், சித்திக் வந்த காரை மறித்துள்ளனர்.
பகீர் சம்பவம்
மேலும், கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் கார் கண்ணாடியை தாக்கி பணம் பறிக்க முயற்சி செய்துள்ளனர். உடனே, சித்திக் பதறியடித்து தப்பித்து அருகே உள்ள சுங்கச்சாவடிக்கு சென்றுள்ளார். அதன்பின் போலீஸாருக்கு புகாரளித்த நிலையில்,
பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த சிவதாஸ் (29), ரமேஷ் பாபு (27), விஷ்ணு (28), அஜய்குமார் (24) ஆகிய 4 பேரை மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த கார்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
மேலும் 2 பேரை தீவிரமாக தேடி வருகின்றனர். விசாரணையில் ஹவாலா பணம் என நினைத்து மற்றொரு காருக்கு பதிலாக, சித்திக் வந்த காரை மறித்து வழிப்பறியில் ஈடுபட முயற்சித்தது தெரியவந்துள்ளது.