தமிழறிஞர் அவ்வை நடராஜன் மறைவு - முதலமைச்சர் நேரில் அஞ்சலி!
தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அவ்வை நடராஜன்
மறைந்த தமிழக முதல்வர் கலைஞருடன் நெருங்கி நட்பு பாராட்டியவர் அவ்வை நடராஜன். வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தமிழறிஞர் அவ்வை நடராஜன்(87) உயிரிழந்தார். அவர் மறைவுக்கு பல்வேறு தமிழறிஞர்கள், இலக்கிய ஆர்வலர்கள், பேராசிரியர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அண்னாநகரில் உள்ள அவ்வை நடராஜன் இல்லத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார். அப்போது ஜெகத்ரட்சகன், கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
முதலமைச்சர் இரங்கல்
தொடர்ந்து, இதுகுறித்து வெளியிட்ட பதிவில், “சிறந்த தமிழறிஞர் அவ்வை நடராசன் (87) அவர்கள், வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்திய செய்தி அறிந்து மிகவும் வேதனையுற்றேன். அவ்வை நடராசன் அவர்கள் ‘உரைவேந்தர்’ அவ்வை துரைசாமி அவர்களின் மகனாகப் பிறந்து,
தந்தையைப் போலவே தமிழிலக்கியத்தில் நாட்டம் கொண்டு கல்லூரிகளில் தமிழைப் பயிற்றுவித்தவர். தமது தமிழ்ப் பணிகளுக்காக பத்மஸ்ரீ, கலைமாமணி முதலிய ஏராளமான விருதுகளை ஔவை நடராசன் அவர்கள் பெற்றிருந்தார்.
எண்ணற்ற நூல்களையும், பல நூறு மாணாக்கர்களையும் நம்மிடம் விட்டுச் சென்றுள்ள பெருந்தகை அவ்வை நடராசன் அவர்களின் மறைவு தமிழ்த்துறையினர்க்கும், கல்விப் புலத்தார்க்கும் பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தார்,
தமிழறிஞர் பெருமக்கள் மற்றும் மாணவர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என இரங்கல் தெரிவித்துள்ளார்.