ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் முதலமைச்சர் சந்திப்பு - நிலுவை மசோதாக்கள் ஒப்புதலாகுமா?
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார்.
ஆளுநர் - முதல்வர் சந்திப்பு
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிலுவையில் வைத்துள்ளதாக சொல்லி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
இந்த வழக்கின் தீர்ப்பில் ஆளுநர் ரவி, முதல்வர் ஸ்டாலினை நேரில் அழைத்து சுமுகமாக பேசி இதற்கு தீர்வு காண வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் ஜனவரி மாதம் கூடவிருக்கிறது.
முக்கிய ஆலோசனை
இந்தக் கூட்டத்தில் ஆளுநர் உரையும் இடம்பெறவிருக்கிறது. அதன்படி, இதுதொடர்பாக ஆளுநரிடம் ஒப்புதல் பெறும்பொருட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க நேரம் கேட்கப்பட்டது. அதன்படி, சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசி வருகிறார்.
நிலுவையில் உள்ள மசோதாக்கள் விவகாரம் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே கடந்த பத்து நாட்களுக்கு முன்பு இதே விவகாரம் குறித்து விவாதிப்பதற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.