முன்னாள் பிரதமர் வி.பி.சிங் சிலையை திறந்து வைத்த முதலமைச்சர் - விருந்தினராக அகிலேஷ்!
சமூக நீதிக் காவலர் திரு. வி.பி. சிங் சிலையை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
வி.பி. சிங்
முன்னாள் இந்திய பிரதமர் வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என சட்டசபை கூட்டத்தொடரில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.
தொடர்ந்து, தமிழக அரசின் சார்பில் சென்னை, காமராஜர் சாலையில் உள்ள மாநில கல்லூரி வளாகத்தில் ரூ.52 லட்சம் மதிப்பில் புதிதாக வி.பி.சிங் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிலையை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த விழாவில், உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
சிலை திறப்பு
மேலும், வி.பி.சிங்கின் மனைவி சீத்தாகுமாரி, மகன்கள் அஜய்சிங், அபய்சிங், அமைச்சர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர். வி.பி. சிங் பதவியிலிருந்த 11 மாத காலத்தில், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்திற்கான தொடக்கப் புள்ளி, வேலை உரிமையை அரசியல் சாசன உரிமை ஆக்கப்பட்டது.
தமிழ்நாட்டு மக்களின் உயிர்ப் பிரச்சினையான காவிரி நீருக்காக நடுவர் மன்ற ஆணையத்தை அமைத்துத் தந்த்தோடு, சென்னையில் அமைந்துள்ள உள்நாட்டு விமான நிலையத்திற்கு பெருந்தலைவர் காமராசர் பெயரையும், பன்னாட்டு விமான நிலையத்திற்கு பேரறிஞர் அண்ணாவின் பெயரையும் சூட்டிய பெருமைக்குரியவர் என்பது குறிப்பிடத்தக்கது.