2 நாள் பயணம்.. இன்று பிரதமர் மோடியை சந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
டெல்லியில் பிரதமர் மோடியை இன்று காலை 11 மணி அளவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது .
மு.க.ஸ்டாலின்
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (26.09.2024) மாலை 5 மணியளவில் சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் டெல்லிக்குப் புறப்பட்டுச் சென்றார்.
அதன்படி டெல்லி சென்றடைந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு விமான நிலையத்தில் மேள தாளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் தமிழ்நாடு இல்லத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞர் படத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் மோடியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று (27.09.2024) காலை 11 மணி அளவில் சந்தித்துப் பேச உள்ளார். அப்போது சென்னை மெட்ரோ ரயிலின் 2ஆம் கட்ட திட்டப் பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு செய்ய வலியுறுத்துகிறார்.
டெல்லி
அதோடு ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ என்கிற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையினை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து இந்த பயணத்தின் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , சோனியா காந்தி உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்தித்துப் பேச உள்ளார்.
அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது இரண்டு நாள் டெல்லி பயணத்தை முடித்துக்கொண்டு இன்று இரவு 8 மணிக்குச் சென்னை திரும்புவதாகத் தகவல் வெளியாகி உள்ளது.