எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை - ஈபிஎஸ் கோரிக்கையை பரிசீலிக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை!
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் அப்பாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.
உறுப்பினர்கள் கோரிக்கை
தமிழக சட்டப்பேரவையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பாக பேச வேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.
எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் உட்கார்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிய எதிர்க்கட்சி துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கையை வழங்க வேண்டும் என அதிமுக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது.
அதுகுறித்து இன்று பேசவேண்டும் என்று அதிமுக உறுப்பினர்கள் சலலப்பை ஏற்படுத்திய நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் அதே கோரிக்கையை முன்வைத்தார்.
நடவடிக்கை எடுக்கப்படும்
அப்போது எழுந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "அதிமுக சட்டப்பேரவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயகுமாருக்கு இடம் ஒதுக்கி தருவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தொடர்ந்து இந்த அவையில் பேசி வருகிறார்.
ஆனால், இது சபாநாயகருக்கு உள்ள உரிமை என்று இந்த விவகாரத்தில் பல முறை சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துவிட்டார். இருந்தாலும் இந்த விவகாரத்தில் நான் கேட்டுக்கொள்வது, எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை சபாநாயகர் மறுபரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யுமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்" என்று தெரிவித்தார்.
அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “முதல்வர் பரிந்துரைப்படி இந்த கோரிக்கை குறித்து மறுபரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.