மாதம் ரூ.1000 - மகளிர் தினத்தில் நற்செய்தி சொன்ன முதலமைச்சர்!
பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்து முதலமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
மாதம் 1000 ரூபாய்
உலக மகளிர் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்" என்று பாலினச் சமத்துவத்துக்காக முழங்கிய பாவேந்தரின் வரிகளால் பெண்கள் அனைவருக்கும் எனது உலக மகளிர் நாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நமது திராவிட மாடல் அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதும், முதலமைச்சராக நான் இட்ட முதல் கையொப்பமே பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்துக்கு வழிவகுக்கும் இலவசப் பேருந்து திட்டத்துக்காகத்தான். முதல் நிதிநிலை அறிக்கையிலேயே, உலகின் முன்னேறிய நாடுகளில் கூட இல்லாத வகையில், மகளிருக்கான ஊதியத்துடன் கூடிய பேறுகால விடுப்பை 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்த்தினோம்.
முதலமைச்சர் உறுதி
அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை 40 விழுக்காட்டுக்கு உயர்த்தி எல்லா அலுவலகங்களிலும் ஆண்களுக்குச் சமமாகவும், ஆண்களை மிஞ்சியும் மகளிர் பணிபுரியும் நிலையை ஏற்படுத்தியுள்ளோம். தொடர்ந்து மூவலூர் மூதாட்டி இராமாமிருதம் அம்மையாரின் பெயரால் பெண்கள் உயர்கல்வி பெறுவதை உறுதி செய்யும் 'புதுமைப் பெண்' திட்டத்தையும் தொடங்கி,
கல்லூரிக்குச் செல்லும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கி வருகிறோம்.
அனைத்துக்கும் முத்தாய்ப்பாக, வருகிற நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு மாதம் 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்குவது குறித்த அறிவிப்பினையும் வெளியிட இருக்கிறோம். பெண்ணுரிமை என்பதை வெறும் சொற்களால் அல்ல, நித்தமும் இத்தகைய எண்ணற்ற புரட்சித் திட்டங்களால் செய்து காட்டுவதுதான் திராவிட மாடல் என்பதைக் கடந்த இரண்டு ஆண்டுகளில் நிரூபித்திருக்கிறோம் எனக் குறிப்பிட்டுள்ளார்.