திடீர் அமைச்சரவை மாற்றம் ஏன்? முதலமைச்சர் விளக்கம்
இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார்.
இலாகா மாற்றம்
தென் கொரிய நாட்டைச் சேர்ந்த ஹூண்டாய் நிறுவனம் தமிழகத்தில் ரூ.20,000 கோடி முதலீடு செய்வது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.
அதில், புதிதாக பதவியேற்ற தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா மற்றும் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,
முதல்வர் விளக்கம்
"தொழில்துறை அமைச்சராக ஏற்கனவே பொறுப்பு விகித்திருந்த அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அவருக்கு உதவியாக இருந்த அதிகாரிகள் பல்வேறு நாடுகளுக்குச் சென்று முன்னணியில் உள்ள தொழில் துறையினரைச் சந்தித்து முதலீடுகளை ஈர்த்து தமிழகத்தின் வளர்ச்சிக்கு பெரிய உதவிகளைச் செய்தனர்.
இதற்காக, அவர்களுக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைக்கு புதிதாக அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டுள்ள டி.ஆர்.பி ராஜா சிறப்பாக செயல்பட்டு அதிக முதலீட்டை ஈர்ப்பார் என்று உறுதியாக நம்புகிறேன். அவருக்கு என் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நிர்வாகக் காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாக்காக்கள் மாறினாலும், தமிழக அரசு தொழில்துறையினருக்கு அளித்து வரும் ஆதரவும், தொழில் வளர்ச்சிக்காக மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளும் என்றும் தொடரும்" எனத் தெரிவித்தார்.