ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில் - பழங்குடியின பெண் நீதிபதிக்கு முதலமைச்சர் வாழ்த்து!
உரிமையியல் நீதிபதி தேர்வில் வெற்றி பெற்ற ஸ்ரீபதிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீதிபதி ஸ்ரீபதி
திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாதுமலை அடுத்த புலியூர் கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின பெண் ஸ்ரீபதி (23). பி.ஏ, பி.எல் சட்டப்படிப்பை முடித்துள்ள இவருக்கு படித்துக்கொண்டிருக்கும்போதே திருமணம் ஆகியுள்ளது.
மேலும், இவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வுக்கு தயாராகி வந்த ஸ்ரீபதிக்கு, பிரசவ தேதியும், தேர்வு தேதியும் ஒரே நாளில் வந்துள்ளது. இதையடுத்து தேர்வுக்கு முந்தைய நாளே அவருக்கு பிரசவமாகி குழந்தை பிறந்துள்ளது. இருந்தும் தனது லட்சியத்தில் உறுதியாக இருந்த ஸ்ரீபதி, தனது கணவர் வெங்கடராமன் மற்றும் நண்பர்களின் உதவியுடன் பிரசவமான இரண்டாவது நாளில் சிவில் நீதிபதி தேர்வு எழுதியுள்ளார்.
இந்நிலையில் சமீபத்தில் வெளியான டிஎன்பிஎஸ்சி சிவில் நீதிபதி தேர்வு முடிவில் ஸ்ரீபதி சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ளார். மேலும், ஜவ்வாது மலையில் 23 வயதில் சிவில் நீதிபதியாக தேர்வாகியுள்ள பழங்குடியின பெண் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். இதற்காக விரைவில் 6 மாத பயிற்சிக்கு ஸ்ரீபதி செல்ல உள்ளார்.
முதல்வர் வாழ்த்து
இந்நிலையில் பலரும் அவரை பாராட்டி வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஸ்ரீபதியை மனதார பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் ‘‘பெரிய வசதிகள் இல்லாத மலைக்கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியினப் பெண் ஒருவர் இளம் வயதில் இந்நிலையை எட்டியிருப்பதைக் கண்டு மகிழ்ச்சியடைகிறேன். அதுவும் நமது ‘திராவிட மாடல் அரசு, தமிழ் வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை’ எனக் கொண்டுவந்த அரசாணையின் வழியே ஸ்ரீபதி நீதிபதியாகத் தேர்வாகியிருக்கிறார் என்பதை அறிந்து பெருமைக் கொள்கிறேன்.
அவரது வெற்றிக்கு உறுதுணையாக நின்ற அவரின் தாய்க்கும், கணவருக்கும் எனது பாராட்டுகள். ‘சமூகநீதி’ என்றச் சொல்லை உச்சரிக்கக்கூட மனமில்லாமல், தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றிதான் தமிழ்நாடு தரும் பதில்’’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ‘நெடுந்தமிழ் நாடெனும் செல்வி - நல்ல நிலைகாண வைத்திடும் பெண்களின் கல்வி!’ என்ற- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் உணர்த்திய வரிகளையும் மேற்கோள் காட்டியுள்ளார்.