அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவியா? - முதல்வர் கொடுத்த ரியாக்ஷன் வைரல்!
அமைச்சர் உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பதவி வழங்குவது குறித்து முதல்வர் விளக்கம் அளித்துள்ளார்.
முதல்வர் ஆய்வு
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கொளத்தூர் தொகுதியில் இன்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் மூலம் கட்டப்பட்டு வரும் துணை மின் நிலையம் மற்றும் சென்னை குடிநீர் வாரியத்தின் கழிவுநீர் வெளியேற்றும் நிலையம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
தொடர்ந்து, பெரியார் நகர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்று வரும் கூடுதல் கட்டிடப்பணிகளை பார்வையிட்டு அதிகாரிகளுடன் ஆலோசனைகளை வழங்கினார்.
துணை முதல்வர் பதவி?
அப்போது செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ,சென்னையில் சிறிதளவு பெய்யும் மழைக்கே தண்ணீர் தேங்குவதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகிறதே என்ற செய்தியாளர் கேள்விக்கு, “சென்னையில் எங்கு தண்ணீர் தேங்குகிறது என்று ஒரு இடத்தையாவது எதிர்க்கட்சிகள் காட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் தமிழகத்தில் தொடர்ந்து மழை அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.இது குறித்த கேள்விக்கு பருவமழைக்கு அனைத்து வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையையும் எடுத்து வருகிறோம். எப்படிப்பட்ட மழை வந்தாலும் சந்திக்க தமிழ்நாடு அரசு தயாராக உள்ளது ” என்றார்.
தொடர்ந்து, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பதவி வழங்க கோரிக்கை வலுத்து வருகிறதே என்று கேட்டபோது, “வலுத்துவருகிறதே தவிர பழுக்கவில்லை” என்று தெரிவித்தார்.