இருளர் இன மக்கள் குடியிருப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு
மாமல்லபுரம் பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
ரூ.4.53 கோடி மதிப்பில் 282 பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை முதல்வர் வழங்கியுள்ளார். பூஞ்சேரி நரிக்குறவர், இருளர் மக்களுக்கு பட்டா, குடும்ப அட்டைகள், வாக்காளர் அடையாள அட்டைகள், சாதி சான்றிதழ்கள் மற்றும் நல வாரிய அட்டைகளை முதல்வர் வழங்கினார்.
அதனையடுத்து பயிற்சிக்கான ஆணைகள், வங்கி கடனுதவி, அங்கன்வாடி வகுப்பறைகள் கட்டும் ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்தார். 33 நபர்களுக்கு சிறுதொழில் தொடங்குவதற்காக தலா ரூ.10,000 வீதம் ரூ.3.30 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.
மேலும் 12 நபர்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் ஒரு லட்சம் வீதம் 12 லட்சம் ரூபாய் கடனுதவியை முதல்வர் அளித்தார்.
6 பேருக்கு முதியோர் உதவித் தொகை; 21 பேருக்கு குடும்ப அட்டை; 88 பேருக்கு சாதிக் சான்றிதழ் வழங்கப்பட்டது.
34 பேருக்கு நரிக்குறவர் நலவாரிய அட்டைகள்; 25 நபர்களுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டைகளையும் முதல்வர் வழங்கினார்.
அதனை தொடர்ந்து பழங்குடியினத்தை சேர்ந்த அஸ்வினி இல்லத்திற்கு நேரில் சென்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
பூஞ்சேரியில் வசிக்கும் நரிக்குறவர், இருளர் இன மக்கள் குடியிருப்புகளில் முதல்வர் மு.க ஸ்டாலின் ஆய்வு செய்து, மக்களின் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பூஞ்சேரி நரிக்குறவர், இருளர் மக்கள் நன்றி தெரிவித்தனர். பாசிமலை, சால்வை அணிவித்து தங்களது நன்றியை முதல்வருக்கு நரிக்குறவர், இருளர் மக்கள் கூறினார்.