உயர்நீதிமன்றம்..தமிழ் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

M K Stalin Tamil nadu Chennai
By Sumathi Sep 04, 2022 10:27 AM GMT
Report

உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும் என நீதிபதிகளிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.

 பல அடுக்கு நீதிமன்றம்

சென்னை மாவட்ட சார்பு நீதிமன்றங்களுக்கு ஒருங்கிணைந்த பல அடுக்கு நீதிமன்றம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டும் விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். இதில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உயர்நீதிமன்றம்..தமிழ் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Cm M K Stalins Request To Supreme Court Judges

நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வரும் 30-ம் தேதி பணி ஓய்வு பெறும் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி மிகச்சிறப்பாக பணியாற்றி உள்ளார், அவருக்கு என் வாழ்த்துகள் என கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீதித்துறையின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதன் மூலம் நீதிபதிகளுடன் சேர்ந்து தானும் மகிழ்ச்சியடைகிறேன், பெருமையாகவும் உணர்கிறேன் என்றார். இங்கு நிற்கும் போது கூட, மிகப்பெரிய கம்பீரத்தையும், உணர்ச்சியையும் தான் உணர்கிறேன். 160-வது ஆண்டுகள் பழமை என்பது சென்னை, கல்கத்தா, மும்பை ஆகிய உயர்நீதிமன்றங்களுக்கே சொந்தம் என கூறிய அவர்,

உயர்நீதிமன்றம்..தமிழ் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் | Cm M K Stalins Request To Supreme Court Judges

சென்னை உயர்நீதிமன்றக் கட்டடம் மிகக் கம்பீரமாக நிற்கிறது என பெருமிதம் தெரிவித்தார். முதல் உலகப்போரில் தாக்குதலுக்கு உள்ளானது சென்னை உயர்நீதிமன்றம். உலக நீதிமன்றத்துக்கே அடையாளமாக உள்ளது சென்னை உயர்நீதிமன்றம். இதே கம்பீரத்துடனும், அழகுடனும் புதிய கட்டடம் அமைய வேண்டும் என்று பொதுப்பணித் துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்.

சிறப்பு கவனம் 

மெட்ராஸ் சட்டக் கல்லூரிக்கு அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்று பெயர் சூட்டியவர் கருணாநிதி என குறிப்பிட்ட அவர், பாரம்பரிய கட்டடங்கள் நம் வரலாறு. அதை பாதுகாப்பதில் அரசு கவனமாக உள்ளது என்றார். சென்னை பழைய சட்டக் கல்லூரி வளாகமும், பழமை மாறாமல் மேம்படுத்தப்படும்.

புதிய கட்டடங்கள் கட்ட வேண்டும் என்ற நீதித்துறையின் பரிந்துரைக்கு அரசு உடனடியாக ஒப்புதல் வழங்கியது. நீதித்துறை உட்கட்டமைப்புகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. திமுக அரசு பொறுப்பேற்றது முதல் 35 புதிய நீதிமன்றங்கள் ரூ.54.85 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.

 4 புதிய நீதிமன்றங்கள்

பட்டியலினத்தவர்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்கவும் 4 புதிய நீதிமன்றங்கள் அமைக்கப்பட உள்ளன. ரூ.268 கோடி இதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 155 பணியாளர் பணியிடங்கள் உருவாக்கித்தரப்பட்டுள்ளன. நீதித்துறையின் நிலையான செயலாக்கத்துக்கு அரசு தொடர்ந்து ஒத்துழைக்கும்.

பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குவதை உறுதி செய்யும் வகையில், நீதித்துறை உட்கட்டமைப்புகளை உருவாக்கித்தருவதில் தமிழ்நாடு அரசு முதலிடத்தில் உள்ளதாக நீதியரசர் ரமணா வெளிப்படையாக பாராட்டினார் என்பதை சுட்டிக்காட்டினார்.

உச்சநீதிமன்ற கிளை

பின்னர் தமிழ்நாட்டின் சார்பாக உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உச்சநீதிமன்றத்துக்கான கிளையை சென்னையில் அமைக்க வேண்டும். உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்பட வேண்டும்.

நீதிபதிகள் நியமனத்தில் சமூகநீதி பின்பற்றப்பட வேண்டும். இங்கு வந்துள்ள உச்சநீதிமன்ற நீதிபதிகள் இதை நிறைவேற்றித் தருவீர்கள் என்று நம்புகிறேன் என தெரிவித்தார்.