மேடையிலே வெடித்த மோதல்; வெளியே போக சொன்ன ராமதாஸ் - அன்புமணி எடுத்த அதிரடி முடிவு
பாமக பொதுக்குழு மேடையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாசிற்கும் இடையே மோதல் வெடித்துள்ளது.
பாமக
புதுச்சேரியில் பாமக பொதுக்குழு கூட்டம் இன்று(28.12.2024) நடைபெற்றது. இதில் பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் பாமக மாநில இளைஞர் சங்க தலைவராக முகுந்தன் என்பவரை நிறுவனர் ராமதாஸ் தேர்வு செய்திருந்தார்.
முகுந்தன் நியமனம்
முகுந்தன் என்பவர் அன்புமணி ராமதாசின் சகோதரி மகன் என கூறப்படுகிறது. முகுந்தன் கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆகியுள்ளதால், அனுபவம் உள்ள ஒருவரை நியமியுங்கள் என இந்த நியமனத்திற்கு மேடையிலே அன்புமணி ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அதற்கு பதிலளித்த ராமதாஸ், "2026 சட்டமன்ற தேர்தலில் 50 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டுமானால் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பலம் தேவை. அதற்காக அன்புமணிக்கு உதவுவதற்காக பரசுராமன் முகுந்தனை இளைஞர் அணி தலைவராக நியமனம் செய்கிறேன்" என கூறினார்.
மேடையில் மோதல்
"எனக்கு உதவியாகவா? எனக்கு வேண்டாம்" என அன்புமணி ராமதாஸ் கூறினார். அதற்கு, "உனக்கு வேண்டாம் என்றால் நீ போ! இது நான் உருவாக்கிய கட்சி, நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கட்சியில் இருக்க முடியாது" என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த அன்புமணி ராமதாஸ், "நான் பனையூரில் தனி அலுவலகத்தை தொடங்கியுள்ளேன். என்னை அங்கு சந்திக்கலாம்" என மேடையிலே அறிவித்தார்.
இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. மேடையிலேயே ராமதாஸும் அன்புமணி ராமதாஸும் மோதிக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.