கூட்டணி மாறுகிறதா பாமக? பரபரப்பை கிளப்பும் ராமதாஸ் ட்வீட்
பாமக நிறுவனர் ராமதாஸ் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவு அரசிய;லில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாமக
பாமக தற்போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகித்து வருகிறது. 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்த கூட்டணி எந்த தொகுதியிலும் வெற்றி பெறவில்லை.
இந்நிலையில் தற்போது பாமக நிறுவனர் ராமதாஸின் எக்ஸ் பதிவு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராமதாஸ்
ஆட்சியில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவது, தனது கருத்துகளை கூறுவது, கட்சியின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துவது என சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருப்பவர் ராமதாஸ்.
இன்று "பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே" என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வரிகள் பவணந்தி முனிவரால் எழுதப்பட்ட இலக்க நூலான நன்னூலில் இடம்பெற்றுள்ளது.
"பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையி னானே"
— Dr S RAMADOSS (@drramadoss) November 3, 2024
பழையன கழிதலும் புதியன புகுதலும் காலப்போக்கில் குற்றம் ஆகாது. இருப்பினும் பழையன எல்லாமே கழிந்து விட வேண்டும். புதியன எல்லாமே புகுந்துவிட வேண்டும் என்பதும் கட்டாயம் இல்லை. பழையனவற்றிலும், புதியனவற்றிலும் உள்ள நல்லவற்றை எடுத்து கொள்ளலாம். அவ்வாறு நல்லது இல்லை என்றால் அதனை விட்டுவிடலாம்'' என்பதே இந்த வரியின் அர்த்தமாகும்.
கூட்டணி மாற்றமா?
இந்த பதிவால் பாமக கூட்டணி மாறுகிறதா என சமூக வலைத்தளங்களில் விவாதம் எழுந்துள்ளது. பாஜக கூட்டணிக்கு முன் பாமக அங்கம் வகித்த அதிமுக கூட்டணிக்கே மீண்டும் செல்கிறதா அல்லது புதிதாக தொடங்கப்பட்ட விஜயின் தவெக போன்ற பிற கட்சிகளுடன் கூட்டணிக்கு செல்கிறதா? என்ற விவாதம் எழுந்துள்ளது.
இந்த பதிவு தொடர்பாக ராமதாஸ் எந்த விளக்கமும் அளிக்காத நிலையில், அவரின் அடுத்தக்கட்ட அறிக்கைகள், செயல்பாடுகள் மூலமே இது கூட்டணி மாற்றம் தொடர்பான பதிவா என்பதை அறிந்து கொள்ள முடியும்.