நடுவானில் விமானத்தில் பெண் பயணிகளிடையே மோதல் - ஜன்னல் உடைந்ததால் பதறிய விமான ஓட்டுநர்
ஆஸ்திரேலியாவில் நடுவானில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் பெண் பயணிகள் மோதிக் கொண்டதால் விமானத்தின் ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
நடுவானில் பறந்த விமானத்தில் மோதல்
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தின் கெயின்ஸ் நகரில் இருந்து வடக்கு பிரதேசத்தில உள்ள குரூட் எய்லாண்ட் நகர் நோக்கி விமானம் ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த போது பெண் பயணிகளிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்தில் பெண் பயணி ஒருவர் பாட்டில் ஒன்றை எடுத்து மற்றொருவர் மீது தாக்க சென்று உள்ளார்.
இதனால் விமானம் மீண்டும் புறப்பட்ட இடத்திற்கே திரும்பியுள்ளது.குறிப்பிட்ட அந்த பெண் பயணி மீது குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அவர் விமான பயணத்தில் இருந்து நீக்கப்பட்டு கீழே இறக்கி விடப்பட்டார். இதன் பின் அந்த மோதலில் ஈடுபட்ட பெண்ணை விட்டு விட்டு பிற பயணிகளுடன் விமானம் மீண்டும் பறந்தது.
ஜன்னல் கண்ணாடி உடைந்ததால் பரபரப்பு
அதே பயணிகள் மீண்டும் தங்களது சண்டையை தொடர்ந்து உள்ளனர். அவர்களும் மோதலில் ஈடுபட்ட நிலையில் விமானத்தின் உள்ளே இருந்த ஜன்னல் பகுதி உடைந்தது.
இந்த சம்பவத்தால் மீண்டும் விமானம் ஆலியாங்குலா பகுதியில் தரையிறங்கியது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 3 பயணிகளை போலீசார் கைது செய்தனர்.
உள்நோக்கத்துடன் பிறருக்கு ஆபத்து விளைவிக்க முயற்சித்தல் சொத்துகளுக்கு பாதிப்பு ஒழுங்கற்ற நடத்தை வன்முறை உள்ளிட்ட குற்றச்சாட்டில் 23 வயது நபர் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
மேலும் மற்றொரு 23 வயது பெண் மீதும் சொத்துகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துதல் உள்பட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
22 வயது நபர் மீது போதை பொருள் விநியோகம், பதுக்கி வைத்தல், தடை செய்யப்பட்ட பகுதியில் மதுபானம் பதுக்கி வைத்தல் உள்ளிட்ட பிரிவுகளில் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு உள்ளது. இதையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.