பிரபல நடிகர் டெல்லி கணேஷ் காலமானார் - தூக்கத்திலேயே பிரிந்த உயிர்!
பிரபல நடிகர் டெல்லி கணேஷ் உடல்நலக்குறைவால் காலமானார்.
டெல்லி கணேஷ்
டெல்லி கணேஷ் ஆகஸ்டு 1,1944 நெல்லையில் பிறந்தார் . பள்ளியில் படிக்கும் போதே மேடை நாடகங்களில் நடித்து வந்தார். அதன் பிறகு தமிழ் திரைத்துறையில் 1976ல் இயக்குநர் கே.பாலச்சந்தரின் ‘பட்டின பிரவேசம்' படத்தில் அறிமுகமானார். இதையடுத்து நடிகர் கமலின் 'அபூர்வ சகோதரர்கள்' படத்தில் வில்லனாக நடித்திருந்தார்.
மேலும் சிந்து பைரவி, நாயகன், மைக்கேல் மதன காம ராஜன், தெனாலி, அவ்வை சண்முகி உள்ளிட்ட படங்களில் தனது யதார்த்தமான நடிப்பால் மனதில் நின்றார். தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துப் பிரபலமானார்.
இவர் குணச்சித்திர வேடங்கள் மட்டுமின்றி, நகைச்சுவை வேடங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், இந்தி என பல்வேறு மொழிகளில் சுமார் 400க்கும் மேற்பட்ட படங்களில் டெல்லி கணேஷ் நடித்துள்ளார். இவர் 1994ல் கலைமாமணி விருது வென்றார்.
மறைவு
தொடர்ந்து குறும்படங்கள், டிவி நெடுந்தொடர்கள், வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக வயது மூப்பு காரணமாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த டெல்லி கணேஷ் (80 வயது ) நேற்று இரவு 11.30 மணியளவில் தூக்கத்திலேயே அவர் உயிர் பிரிந்துள்ளது.
இவரது மறைவு தமிழ் திரையுலகினர் மத்தியில் பேரதிர்ச்சியை ஆழ்த்தி உள்ளது. சமீபத்தில் திரைக்கு வந்த ரத்னம், அரண்மனை 4, இந்தியன் 2 ஆகிய படங்களிலும் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.