சிகரெட் லைட்டர்களை தடை பிறப்பிக்கணும்!! தமிழக முதலமைச்சருக்கு சபாநாயகர் கடிதம்
தமிழக சட்டமன்றத்தின் சபாநாயகர் அப்பாவு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு முக்கிய கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
தீப்பெட்டி
தென் மாவட்டங்களில் முக்கிய தொழிலான தீப்பெட்டி தொழில் பிளாஸ்டிக் லைட்டர்களால் பாதிக்கப்படுவது தீப்பெட்டி தொழிலில் ஈடுபடுவர்கள் சார்பில் தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் தான், சீனா பிளாஸ்டிக் லைட்டர்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கும் அறிவிப்பாணை பிறப்பிக்க தமிழக முதலமைச்சருக்கு சபாநாயகர் அப்பாவு கடிதம் எழுதியுள்ளார்.
அப்பாவு கடிதம்
அவர் எழுதியிருக்கும் கடிதத்தில், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட தென் மாவட்டங்களிலும் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களிலும், தீப்பெட்டி உற்பத்தி தொழில் முக்கிய தொழிலாக விளங்கி வருகிறது.
கடந்த காலத்தில் வெளிநாட்டு தீப்பெட்டிகள் மற்றும் சைனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதி காரணமாக தீப்பெட்டி உற்பத்தி தொழில் கடுமையாக பாதித்தது. இதைத் தொடர்ந்து, சைனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டுமென்று ஒன்றிய அரசுக்கு 08.09.2022 அன்று தாங்கள் கடிதம் எழுதி வலியுறுத்தியதன் விளைவாக இந்த சைனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்கு மத்திய அரசு தடை விதித்தது. மேலும், வெளிநாட்டு தீப்பெட்டி விற்பனைக்கும் தடைவிதிக்கப்பட்டது. இதற்காக, தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் தங்களுக்கு மனமுவந்து நன்றியை தெரிவித்துக் கொண்டார்கள்.
தற்போது சீன பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படிருந்தாலும், வடநாட்டு கம்பெனிகள் அதை தயாரிக்கும் மூலப்பொருட்களை இறக்குமதி செய்து லைட்டர்களை தயாரித்து ரூ. 8 முதல் ரூ. 10க்கு விற்பனை செய்கிறார்கள். இதனால் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர். எனவே தென் மாவட்டங்களில் முக்கிய தொழிலாக விளங்கும் தீப்பெட்டி உற்பத்தி தொழிலை கடுமையாக பாதிக்கும் சைனா பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டிற்கு தடை விதிக்கும் அறிவிப்பாணை (Notification) பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் முதலமைச்சர் மு.கஸ்டாலினுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.