இது என்னுடைய கதை.. வாழை படத்திற்கு எதிராக எழுத்தாளர் பரபரப்பு கருத்து!
10 ஆண்டுகளுக்கு முன்பே வாழை திரைப்பட கதையை சிறுகதையாக எழுதியுள்ளதாக சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன் தனது முகநூலில் கருத்து பதிவிட்டுள்ளார்.
வாழை திரைப்படம்
இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழை திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெறும் ஆதரவை பெற்று வருகிறது.படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, ரசிகர்களை கலங்க வைத்துள்ளது. உண்மைச் சம்பவங்களை களமாக வைத்து மாரி செல்வராஜ் இந்தப் படத்தை எடுத்திருப்பதால் பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
இந்த சூழலில் 10 ஆண்டுகளுக்கு முன்பே வாழை திரைப்பட கதையை சிறுகதையாக எழுதியுள்ளதாக சாகித்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ தர்மன் தனது முகநூலில் கருத்து பதிவிட்டுள்ளது பேசுபொருளாகி உள்ளது.
அதில் , ஏராளமான நண்பர்களிடமிருந்து போன் கால்கள்.வாழை படம் பாருங்கள்.உங்கள் சிறுகதை அப்படியே இருக்கிறது என்று.இன்று படம் பார்த்தேன். என் உடன் பிறந்த தம்பியும் என் தாய் மாமாவும் பெண் எடுத்திருக்கிற ஊர் திருவைகுண்டம் அருகில் உள்ள பொன்னங்குறிச்சி.வாழைதான் பிரதான விவசாயம்.
நான் அங்கு போகும் போதெல்லாம் வாழைத்தார் சுமக்கும் சிறுவர்களின் கஷ்டத்தை பார்த்து எழுதியதுதான் என்னுடைய"வாழையடி......"என்கிற சிறுகதை. என் கதையில் லாரி,டிரைவர்,கிளீனர்,இடைத்தரகர்,முதலாளி,சிறுவர்கள்,சிறுமிகள்,அவர்கள் படுகின்ற கஷ்டம்,கூலி உயர்வு எல்லாம் உண்டு.
சர்ச்சை கருத்து
ஆனால் டீச்சர்,கர்ச்சீப்,காலாவதியாகிப் போன பொருட்கள், கம்னியூஸ்ட் கட்சி சின்னம், துன்பவியல் விபத்து கிடையாது. வெகுஜன ஊடகமான சினிமாவுக்கு வந்ததால் வாழை கொண்டாடப்படுகிறது.ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதிய என்கதை இலக்கியமாகவே நின்று விட்டது.
இன்று கொண்டாடப்படுகின்ற ஒரு கதையை பத்தாண்டுகளுக்கு முன்பே நான் எழுதியிருக்கிறேன் என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறேன் .ஒருபடைப்பாளி என்கிற வகையில் கர்வமும் கொள்கிறேன்.இச் சிறுகதை என்னுடைய "நீர்ப் பழி"என்கிற சிறுகதைத் தொகுப்பில் இரண்டாம் கதையாக இடம் பெற்றிருக்கிறது.
கிராமங்களில் வாழையைப் பற்றி ஒரு சொலவடை உண்டு. "வாழை வாழவும் வைக்கும்.தாழவும் வைக்கும்." என்னை வாழை வாழ வைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.