நிலவிலிருந்து புறப்பட்டு பூமியில் தரையிறங்கிய விண்கலம் - உள்ளே இருப்பது என்ன?
நிலவின் மண், பாறை மாதிரிகளுடன் 'சாங் இ-6' விண்கலம் பூமிக்கு திரும்பியுள்ளது.
சாங் இ-6
நிலவின் தென்துருவத்திற்கு சீனா அனுப்பிய 'சாங் இ-6' என்ற விண்கலம் கடந்த 2-ம் தேதி நிலவின் எய்ட்கென் படுகையில் தரையிறங்கியது. இதனையடுத்து அதன் இயந்திர கை மற்றும் துளையிடும் கருவி மூலம் நிலவின் மண் மற்றும் பாறை மாதிரிகளை சேகரித்தது.
பின்னர் நிலவை சுற்றிவந்த லேண்டருக்கு அந்த மாதிரிகள் மாற்றப்பட்டு பூமிக்கு புறப்பட்டது. இந்நிலையில் 'சாங் இ-6' விண்கலம் நிலவின் மண், பாறை மாதிரிகளுடன் மங்கோலியாவில் உள்ள பாலைவனத்தில் தரையிறங்கியது.
2 மாத பயணம்
தற்போது அந்த மாதிரிகளை விஞ்ஞானிகள் ஆய்வுக்கூடத்துக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இந்த பணிகள் சுமார் 2 மாத பயணத்திற்கு பிறகு நிறைவடைந்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.
மேலும், இதுகுறித்து விஞ்ஞானிகள் கூறுகையில் "இந்த மண் துகள்கள், கிரகங்கள் உருவானது குறித்தும் அதன் தன்மை குறித்தும் அறிந்து கொள்ள நிச்சயம் பயன்படும். இந்த வெற்றி குறிப்பிட்ட ஒரு நாட்டுக்கு மட்டும் சொந்தமானது இல்லை. ஒட்டுமொத்த மனித குலத்திற்கே சொந்தமானது" என்று தெரிவித்துள்ளனர்.