8 மணி நேரம் போன் இல்லாமல் இருந்தால் ரூ.1லட்சம் பரிசு - இப்படி கூட போட்டியா?
8 மணி நேரம் போன் பயன்படுத்தாமல் பெண் ஒருவர் ரூ.1 லட்சம் பரிசு வென்றுள்ளார்.
மொபைல் போன் பயன்பாடு
ஒரு காலத்தில் அவசர தேவைக்காக மட்டும் மொபைல் போன் பயன்படுத்தப்பட்டு வந்தது. தற்போது போன் மனிதனின் 3வது கையாக மாறி விட்டது.
இணைய பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் வளர வளர செல்போனின் பயன்பாடும் அதிகரித்து தூங்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலை வந்து விட்டது.
1 லட்சம் பரிசு
அத்தியாவசிய தேவை தவிர்த்து பொழுதுபோக்கிற்க்காக செல்போனை பார்த்து தூங்கும் நேரமும் குறைந்து விடுகிறது. இந்நிலையில் சீன நிறுவனம் ஒன்று மனிதர்களின் செல்போன் அடிமைத்தனத்திற்கு சவால் விடும் வகையில் போட்டி ஒன்றை அறிவித்தது.
இந்த போட்டியானது, சோங்கிங் நகராட்சியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கடந்த நவம்பர் 29 அன்று நடந்தது. 8 மணி நேரம் செல்போன் இல்லாமல் 10,000 யுவான் (இந்திய மதிப்பில் ரூ.1.2 லட்சம்) பரிசு என அறிவிக்கப்பட்டது.
செல்போன், லேப்டாப் போன்ற கேஜெட்களில் குறைந்த நேரத்தை செலவிட சீனா குடிமக்களை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இந்த போட்டி நடத்தப்பட்டது.
தூங்க அனுமதி இல்லை
இந்த போட்டிக்கு 100 பேர் விண்ணப்பித்திருந்தாலும் 10 பேர்தான் அனுமதிக்கப்பட்டனர். 10 பேரிடமும் செல்போன் வாங்கப்பட்டு, அவர்களுக்கு ஒரு படுக்கை அளிக்கப்பட்டது. இவர்கள் தூங்குவதற்கு அனுமதி இல்லை. டாய்லெட் செல்வதற்கு மட்டுமே படுக்கையிலிருந்து வெளியே செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
குடிநீர், உணவு போன்றவற்றை தேவையான நேரத்தில் போட்டி அமைப்பாளர்கள் படுக்கைக்கு வந்து வழங்கினர். மேலும் இவர்கள் பதற்றமடையவும் அனுமதி கிடையாது. இவர்களின் மன அழுத்தம் ஆகியவற்றை கண்காணிக்க கையில் ஒரு வாட்ச் பொருத்தப்பட்டது.
வாழ்க்கை முறை உதவியது
இதில் டாங் என்ற பெண் 100 க்கு 88.99 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றார். நீண்ட நேரம் படுக்கையில் இருந்ததோடு மட்டுமல்லாமல், குறைந்த பதட்டத்தையும் காட்டினார். மேலும் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்லவே இல்லை.
இது குறித்து பேசிய டாங், "நான் தொலைபேசியில் ஸ்க்ரோல் செய்வதில் நேரத்தை வீணடிப்பதில்லை. ஓய்வு நேரத்தில் எனது குழந்தைக்கு பயிற்சி அளிப்பேன் இந்த வாழ்க்கை முறைதான் போட்டியில் வெற்றி பெற உதவியது" என தெரிவித்துள்ளார்.