71 லட்சத்தை கையால் எண்ண வைத்து பழி வாங்கிய வாடிக்கையாளர் - அப்படி என்ன கோபம்?
71 லட்சம் பணத்தை கையால் எண்ண வைத்து நிறுவன பணியாளர்களை வினோத முறையில் வாடிக்கையாளர் பழி வாங்கியுள்ளார்.
71 லட்சம்
லூயிஸ் உய்ட்டன்(Louis Vuitton) நிறுவனம் ஆடை, காலணி, வாசனை திரவியங்கள் விற்கும் உலகின் முன்னணி நிறுவனமாகும். இந்த நிறுவனத்திற்கு உலகின் 50 நாடுகளில் 460 கடைகள் உள்ளது.
இந்நிலையில் பெண்மணி ஒருவர் சீனாவில் உள்ள சோங்கிங் நகரில் உள்ள ஸ்டார் லைட் வணிக வளாகத்தில் அமைந்துள்ள லூயிஸ் உய்ட்டன் கடைக்கு பெரிய பை ஒன்றில் 600,000 யுவன்(இந்திய மதிப்பில் ரூ. 71 லட்சம்) எடுத்துக்கொண்டு தன்னுடன் உதவியாளரையும், நண்பரையும் அழைத்து கொண்டு சென்றுள்ளார்.
பழிவாங்கல்
அப்பொழுது சில பொருட்கள் வாங்க உள்ளதாக அங்குள்ள விற்பனை பிரதிநிதியிடம் கூறி விட்டு கொண்டு வந்திருந்த பையில் உள்ள பணத்தை எண்ண சொல்லியுள்ளார். அதை அங்கிருந்த ஊழியர் 2 மணி நேரமாக எண்ணி முடித்த பின்னர் தான் எதுவும் வாங்க விரும்பவில்லை என கொண்டு வந்திருந்த பணப்பையை எடுத்துக்கொண்டு கிளம்பி விட்டார்.
இது குறித்து சீன சமூக வலைதளமான Xiaohongshu வில் அவர் எழுதியிருந்த பதிவு வைரலாகி வருகிறது. மேலும், கடந்த ஜூன் மாதம் அவர் அந்த கடைக்கு சென்ற போது அங்கிருந்த விற்பனை பிரதிநிதி அவருக்கு காலாவதியான பொருட்களை காட்டியுள்ளார், மேலும் தண்ணீர் கேட்ட போது தர மறுத்துள்ளார். எனவே அதற்கு பழி வாங்கும் விதமாக இவ்வாறு பணத்தை கையில் எண்ண வைத்து விட்டு எதுவும் வாங்காமல் வந்ததாக தெரிவித்துள்ளார்.
இவரின் பதிவுக்கு இந்த ஆண்டின் மிகவும் திருப்திகரமான பழிவாங்கல் என ஒருவர் கமெண்ட் செய்துள்ளார். மேலும் ஒருவர், இந்த முடிவு மிகவும் மகிழ்ச்சிகரமானது. இந்தக் கடைக்காரர்கள் ஏன் இவ்வளவு திமிர்பிடித்திருக்கிறார்கள் என்று நான் எப்போதும் யோசித்துக்கொண்டிருக்கிறேன் என கருத்து தெரிவித்துள்ளார்.