ஆப்பிள் லேப்டாப் திருட்டு - "அன்புள்ள முதலாளிக்கு" கடிதம் எழுதிய திருடன்
ஆப்பிள் லேப்டாப் மற்றும் கைக்கடிகாரம் திருடிவிட்டு கடிதம் எழுதி வைத்து சென்றுள்ளார் திருடர்.
சீனா
பொதுவாக, திருடிய பிறகு மாட்டிக்கொள்ளாமல் இருக்க எந்த தடயமும் விட்டு செல்லாமல் இருக்கவே திருடர்கள் முயற்சிப்பார்கள். ஆனால் திருடி விட்டு தொலைபேசி எண்ணுடன் கடிதம் எழுதி வைத்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சீனாவின் ஷாங்காய் நகரில் ஒரு நிறுவனத்தில் திருட நுழைந்த திருடர் அங்கிருந்து ஆப்பிள் லேப்டாப், கைக்கடிகாரம் ஆகியவரை எடுத்துள்ளார். மேலும் அங்கிருந்து கிளம்பும் முன் அலுவலக முதலாளிக்கு கடிதம் ஒன்றை எழுதி வைத்து சென்றுள்ளார். அங்குள்ள மொபைல் போன்கள் மற்றும் மடிக்கணினிகளை சேகரித்து, ஒரு மேசை மீது குவித்து அந்த கடிதத்தை அதன் கீழே வைத்துள்ளார்.
கடிதம்
அந்த கடிதத்தில், "அன்புள்ள முதலாளி, நான் ஒரு கைக்கடிகாரத்தையும் மடிக்கணினியையும் எடுத்துள்ளேன். உங்கள் பாதுகாப்பு அமைப்பை மேம்படுத்த வேண்டும். மேலும் உங்கள் தொழிலை பாதிக்கும் என்ற காரணத்தால் நான் எல்லா தொலைபேசிகளையும் மடிக்கணினிகளையும் எடுக்கவில்லை.
குறிப்பின் முடிவில், "உங்கள் லேப்டாப் மற்றும் தொலைபேசியைத் திரும்பப் பெற விரும்பினால் என்னைத் தொடர்பு கொள்ளுங்கள்" இப்படிக்கு சாங் என்று எழுதி, தனது மொபைல் எண்ணையும் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த ஷாங்காய் போலீசார், கண்காணிப்பு கேமரா மற்றும் அவர் விட்டு சென்ற மொபைல் எண் மூலம் சாங்கை கண்டுபிடித்துள்ளனர். ஷாங்காயில் இருந்து புறப்படும் ரயிலில் சிக்கிய அவரிடம் , திருடப்பட்ட பொருட்களை பறிமுதல் செய்து, தற்போது காவலில் வைக்கப்பட்டுள்ளார்.