‘பணம் இல்லனா... எதுக்கு வீட்டை பூட்டி விட்டு செல்றீங்க...’ - கடுப்பில் கடிதம் எழுதிய திருடன் கைது
திருடச் சென்ற வீட்டில் எதுவும் கிடைக்காத விரக்தியில் திருடன் வீட்டின் உரிமையாளருக்கு ஒரு கடிதம் எழுதி வைத்து சென்றவனை போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.
மத்தியப் பிரதேசத்தின் தேவாஸ் என்ற மாவட்டத்தில் சப்-டிவிஷனல் மாஜிஸ்திரேட் ஆக இருப்பவர் திரிலோச்சின் கவுர். இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றார். வெளியூர் சென்று விட்டு இரு வாரங்களுக்கு பின்பு கடந்த 10ம் தேதி வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டிற்கு வந்ததும் வீட்டின் உள்ளே சென்று பார்க்கையில், வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் கலைந்து கீழே விழுந்து கிடந்தன. உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
போலீசார் விரைந்து வந்து வீட்டை சோதனை நடத்தினர். அப்போது, கடிதம் ஒன்று அங்கு சிக்கியது. அந்தக் கடிதத்தில், 'பணமோ விலைமதிப்பு மிக்க பொருளோ இல்லாத இந்த வீட்டை எல்லாம் எதற்காகப் பூட்டி வைத்திருக்கிறீர்கள்?' என இந்தியில் திருடன் எழுதிவிட்டு சென்றுள்ளான். கடிதம் எழுதி வைத்து விட்டு சென்ற திருடர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.