அலுவலக நேரத்தில் குட்டி தூக்கம் - 41 லட்சம் இழப்பீடு வழங்கும் நிறுவனம்
அலுவலகத்தில் தூங்கியதால் 20 வருட ஊழியரை நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது.
அலுவலகத்தில் தூக்கம்
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள டாய்க்சிங் (Taixing) நகரில் இயங்கி வரும் கெமிக்கல் நிறுவனத்தில் ஜாங் (Zhang) என்ற நபர் கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 20 வருடமாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஒரு நாள் நள்ளிரவு வரை வேலை இருந்ததால் அலுவலகத்தில் உள்ள மேஜையில் சாய்ந்து 1 மணி நேரம் தூங்கியுள்ளார்.
பணி நீக்கம்
ஜாங் தூங்குவதை சிசிடிவி கேமராவில் பார்த்த மேலதிகாரிகள் நிறுவன நெறிமுறைகளை மீறியதாக கூறி அவரை வேலையை விட்டு தூக்கியுள்ளனர்.
நீங்கள் 2004ல் ஓபன் கான்டிராக்ட்டில் கையெழுத்திட்டு நிறுவனத்தில் சேர்ந்தீர்கள். வேலையில் தூங்கும் உங்கள் நடத்தை நிறுவனத்தின் கொள்கை மீறலாகும். எனவே, தொழிற்சங்கத்தின் ஒப்புதலுடன், உங்களை வேலையை விட்டு நிறுத்த முடிவு செய்துள்ளோம் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
ரூ.41 லட்சம் இழப்பீடு
இதை நியாயமற்றது என கூறி நிறுவனத்தின் முடிவை எதிர்த்து ஜாங் நீதிமன்றம் சென்றுள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதிகள், "நிறுவன விதிமுறைகளை மீறினால் நடவடிக்கை எடுக்க நிறுவனத்திற்கு அதிகாரம் உண்டு. ஆனால் அதற்கு தகுந்த காரணம் இருக்க வேண்டும்.
முதல்முறை பணியிடத்தில் தூங்குவதால் நிறுவனத்திற்கு பெரிய பாதிப்பு இல்லை. 20 ஆண்டுகளாக வேலை பார்த்தவருக்கு பதவி உயர்வும், சம்பள உயர்வும் வழங்க விரும்பாததால் அவரை பணிநீக்கம் செய்ததாகத் தெரிகிறது. எனவே, ஜாங்கிற்கு 350,000 யுவான் (ரூ.41.6 லட்சம்) இழப்பீடு வழங்க வேண்டும்" நிறுவனத்துக்கு உத்தரவிட்டுத் தீர்ப்பளித்தார்.