அரசு பள்ளி வழங்கிய மதிய உணவில் பூரான்...சாப்பிட்ட 50 குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம்!
அரசு பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
உணவில் பூரான்..
சிதம்பரம் அருகே உள்ள வரகூர்பேட்டை கிராமத்தில் அரசு ஆதிதிராவிட நடுநிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இதில் 100க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், வழக்கம் போல் மதியம் மாணவர்கள் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டனர்.
அப்போது உணவு பாத்திரத்தில் பூரான் ஒன்று கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த சத்துணவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த மாணவர்களை தடுத்து நிறுத்தினர். மேலும் சாப்பிடாத மாணவர்களிடம் யாரும் உணவு சாப்பிட வேண்டாம் என்று எச்சரித்தனர்.
வாந்தி, மயக்கம்
இதனையடுத்து, உணவு சாப்பிட்ட சில மாணவர்களுக்கு லேசான மயக்கமும், தலை சுற்றலும் ஏற்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, ஆசிரியர்கள், பாதிக்கப்பட்ட மாணவர்களை ஆட்டோ மூலமும், 108 ஆம்புலன்ஸ் மூலமும் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.
சிதம்பரம் அரசு காமராஜர் மருத்துவமனையில் 24 மாணவ, மாணவிகள் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிரமாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்த தகவலறிந்த சிதம்பரம் ஏஎஸ்பி ரகுபதி மற்றும் போலீசார்
உடனடியாக அரசு மருத்துவமனைக்கு விரைந்து சென்று அங்கு விசாரணை நடத்தினர். பின்னர் வருவாய்துறை, கல்வித்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகளும் அரசு மருத்துவமனைக்கு நேரில் வந்து விசாரணை நடத்தினர்.