தமிழகத்தில் அதிகரித்து வரும் குழந்தை திருமணம் - அதுவும் எந்த மாவட்டம் தெரியுமா?
தமிழகத்தில் குழந்தை திருமணங்கள் அதிகரித்து வருவது குறித்து பார்க்கலாம்.
குழந்தை திருமணம்
இந்தியாவில் திருமண வயது பெண்களுக்கு 18 ஆகவும், ஆண்களுக்கு 21 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த வயதுக்கு கீழ் திருமணம் செய்தால் சட்டப்படி தண்டனைக்கு ஆளாவார்கள். ஆனால் இன்னமும் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இந்த குழந்தை திருமணம் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில், பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போதே சிறுமிகளுக்கு திருமணம் நடைபெறும் சம்பவம் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளது. அதன் படி கடந்த சில நாட்களுக்கு முன்பாக பெண் ஒருவர் கர்ப்பம் ஆன நிலையில் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்துள்ளார்.
அப்போது அந்த பெண்ணின் வயதை மருத்துவர்கள் கேட்ட நிலையில் 16 வயது என்று கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனையடுத்து போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் குழந்தை திருமணம் தொடர்பாக தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.
எந்த மாவட்டம் ?
அதில் 2023-2024-ல் குழந்தை திருமணங்கள் 55.6% அதிகரித்துள்ளதாகவும், 2023ஆம் ஆண்டில் 1,054 குழந்தை திருமணங்களும், 2024-ல் 1,640 குழந்தை திருமணங்களும் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்சமாக ஈரோடு மாவட்டத்தில் 150 குழந்தை திருமணங்களும், திருநெல்வேலி மாவட்டத்தில் 133 திருமணங்களும் நடைபெற்று முன்னிலையில் உள்ளது. ஈரோடு மற்றும் நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு குழந்தை திருமணம் இரு மடங்காக அதிகரித்துள்ளது.
மேலும் 2022 ஆம் ஆண்டில் 70% குழந்தை திருமணங்கள் தடுக்கப்பட்டுள்ளதாகவும், 2023 ஆம் ஆண்டில் 65 சதவிகிதமும், 2024 ஆம் ஆண்டு 54% துணியில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் தகுந்த நடவடிக்கை எடுக்காததால் குழந்தை திருமணம் தடுத்து நிறுத்தப்படும் சதவிகிதம் குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.