மனிதர்களை மனிதர்களாக்குவது கல்விதான் - முதலமைச்சரின் ஆசிரியர் தின வாழ்த்து!

M K Stalin Teacher’s Day Tamil nadu Festival
By Sumathi Sep 04, 2022 02:41 PM GMT
Report

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஆசிரியர் தினம் 

ஆசிரியர் தினத்தையொட்டி தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “ஒரு சிறந்த நாடு, எப்படித் திகழ வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூற வந்த தெய்வப்புலவர் திருவள்ளுவர், "தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு " - என்கிறார்.

மனிதர்களை மனிதர்களாக்குவது கல்விதான் - முதலமைச்சரின் ஆசிரியர் தின வாழ்த்து! | Chief Minister Stalin Greetings On Teachers Day

இக்குறட்பாவிலுள்ள 'தக்கார்' என்னும் சொல்லுக்கு ஒழுக்க நெறி தவறாமல் வாழ்வோர் என்று உரையாசிரியர்கள் பொருள் காண்பர். ஆனால் 'தக்கார்' என்று சுட்டப் பெறுவோர் "ஆசிரியர்" என்று பொருள் காண நான் விழைகின்றேன்.

மு.க.ஸ்டாலின் வாழ்த்து

ஏனெனில், தமக்குரிய நெறியிலிருந்து வழுவாது, பிறழாது தாமும் வாழ்ந்து, வளரும் இளம் தலைமுறையினரையும் அந்நெறிப்படி வாழக் கற்றுக் கொடுக்கும் பொறுப்புமிக்கவர்களாக இருப்பவர் ஆசிரியர்களே. மனிதர்களை-மதிவாணர்களாக்குவதும், மாமேதைகளாக்குவதும் ஏன் மனிதர்களை மனிதர்களாக்குவதும் கல்விதான்.

மனிதர்களை மனிதர்களாக்குவது கல்விதான் - முதலமைச்சரின் ஆசிரியர் தின வாழ்த்து! | Chief Minister Stalin Greetings On Teachers Day

காலத்தால் அழிக்க முடியாத அத்தகைய கல்விச் செல்வத்தை மாணவச் செல்வங்களுக்கு அள்ளித் தருபவர்கள் ஆசிரியப் பெருமக்களே. அனைத்துக் குழந்தைகளுக்கும் தரமான கல்வியை வழங்கவும், பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவரையும் பள்ளியில் சேர்க்கவும், அவ்வாறு சேர்க்கப்பட்ட குழந்தைகளை இடைநிற்றல் ஏதுமின்றி முழுமையாகத் தொடரவும்,

இல்லம் தேடிக் கல்வி

குழந்தைகளின் வயதுக்கேற்ற கற்றல் அடைவுகளை உறுதி செய்யவும், ஆசிரியர்களுக்குச் சிறந்த பயிற்சிகளை அளித்து அவர்தம் திறன்களை வளர்க்கும் நோக்கோடு தமிழ்நாடு அரசு 2022-2023-ம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.36,895.89 கோடியை ஒதுக்கியுள்ளது.

கொரோனா பெருந்தொற்றினால் மாணவர்களிடையே உருவான கற்றல் இழப்புகளை ஈடு செய்ய, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்களுக்கு அவர்தம் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே 2 இலட்சம் தன்னார்வலர்களைக் கொண்டு, அக்டோபர் 2021 முதல் "இல்லம் தேடிக் கல்வித் திட்டத்தினை" அரசு செயல்படுத்தி வருகின்றது.

எண்ணும் எழுத்தும் இயக்கம்

இத்திட்டத்திற்கென சுமார் ரூ.163 கோடி இதுவரை செலவிடப்பட்டுள்ளது. மேலும், 9 முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்கு பயன்படும் வகையில் "நான் முதல்வன்" என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுமட்டுமல்லாமல், எதிர்வரும் 2025-ம் ஆண்டிற்குள், 1 முதல் 3-ம் வகுப்பு வரை பயிலும் அனைத்துக் குழந்தைகளும் வாசித்தல்,

எழுதுதல் மற்றும் அடிப்படை எண்ணறிவுத் திறன்களைப் பெறும் நோக்கோடு, 2021-22-ம் ஆண்டில் "எண்ணும் எழுத்தும் இயக்கம்" தொடங்கப்பட்டு, பல்வேறு செயல்பாடுகளுக்கென ரூ.66.70 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கவிமணி விருது

குழந்தைகளின் எழுத்தார்வத்தை ஊக்குவிக்கும் வண்ணம், 18 வயதிற்குட்பட்ட இளம் எழுத்தாளர்களில் ஆண்டுதோறும், மூன்று சிறந்த எழுத்தாளர்களைத் தேர்வு செய்து ரூ.25,000/- ரொக்கம், கேடயம் மற்றும் சான்றிதழுடன் "கவிமணி விருது" வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பள்ளி மாணாக்கர்களுக்குத் தமிழ்மொழித் திறனறித் தேர்வு நடத்தி,

ஆண்டு தோறும் 1500 பேர் தெரிவு செய்யப்பட்டு, இரண்டாண்டுகளுக்கு ஊக்கத் தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கல்வியாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், எழுத்தாளர்கள், பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்கள், மாணவர்கள் என சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினரும் பயன்பெறும் வண்ணம் மதுரையில் "முத்தமிழ் அறிஞர் கலைஞர் நினைவு நூலகம்" அமையவுள்ளது.

நாட்டின் எதிர்காலச் சொத்துக்களாம் இளைய தலைமுறையை, நன்முத்துக்களாக உருவாக்கம் பெரும் பொறுப்புக்குச் சொந்தக்காரர்களாகிய ஆசிரியப் பேரினத்தை அரசும், நாட்டோரும், நல்லோரும் மதித்துப் போற்றுவதன் அடையாளமே இந்த ஆசிரியர் தின விழாக் கொண்டாட்டம். வகுப்பறை அனுபவங்களின் மூலம் இடையறாது பணி செய்து மென்மேலும் திறம் பெற்று சிறந்த ஆசிரியர்களாய் என்றும் சீர்பெற்று விளங்க நெஞ்சார்ந்த வாழ்த்துகள்” என தெரிவித்துள்ளார்