ஒரு சல்லிக்காசு கூட மத்திய அரசு தரவில்லை; மக்கள் ஏமாற மாட்டார்கள் - முதல்வர் மு.க.ஸ்டாலின்!
தமிழக மழை வெள்ளத்திற்கு ஒரு சல்லிக்காசு கூட தராதவர்களை பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலின்
மயிலாடுதுறை மாவட்டத்தில் ரூ.114.48 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.
இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "டெல்டா மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகளை வழங்குவதில் மகிழ்ச்சி அடைகிறேன். மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சி.
மயிலாடுதுறைக்கு ரூ.10 கோடியில் புதிய நகராட்சி கட்டடம் கட்டப்படும். விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உப்புநீர் புகுவதை தடுக்க ரூ.44 கோடியில் நீர் ஒழுங்குகள் அமைக்கப்படும்.
மக்கள் ஏமாற மாட்டார்கள்
ரூ.2.40 கோடி செலவில் புதிய படுகயணை கட்டப்படும். ரூ.5 கோடியில் புதிய நூலகம் அமைக்கப்படும்" என்றார். தொடர்ந்து பேசிய அவர் "தேர்தல் வருவதால் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கடி தமிழ்நாடு வர துவங்கியுள்ளார்.
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவர்கள் அல்ல நாங்கள். தமிழ்நாட்டுக்கு நன்மையான திட்டங்களையும், தமிழ்நாட்டின் கோரிக்கைகளையும் நிறைவேற்றிவிட்டு வரட்டும். தமிழ்நாட்டு மக்களின் வரிப்பணம், ஓட்டு ஆகியவை மட்டும் போதும் என்ற நினைப்பில் இருக்கிறார்கள். அடுத்தடுத்து 2 இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டிற்கு தேவையான நிவாரண நிதியை மத்திய அரசு இன்னும் தரவில்லை.
தமிழக மழை வெள்ளத்திற்கு 1 ரூபாய் கூட, ஒரு சல்லிக்காசு கூட தராதவர்களை பார்த்து தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏமாற மாட்டார்கள். தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும், வளர்ச்சிக்காகவும் நிற்கும் தி.மு.க. அரசிற்கு என்றும் மக்கள் துணை நிற்பார்கள்" என்று தெரிவித்துள்ளார்.