தமிழகத்துக்கு விரோதம் செய்துவிட்டு பிரதமர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் - ஸ்டாலின் குற்றச்சாட்டு !
தமிழ்தான் மூத்தமொழி என பிரதமர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்று திருச்சியில் நடந்த பிரச்சாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்கவிருப்பதால் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சியில் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.
திருச்சி அருகே சிறுகனூரில் நடைபெற்ற பொது கூட்டத்தில் வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து முதல்வர் உரையாற்றினார் அப்போது, திருச்சி என்றாலே திமுகதான். திருச்சியில் இருந்து தொடங்கும் பாதை எப்போதும் வெற்றிப்பாதைதான். தேர்தல் நேரம் என்பதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகிறார். திமுகவினருக்கு தூக்கம் வரவில்லை என்று பிரதமர் மோடி பேசியிருக்கிறார்.
குற்றசாட்டு
தோல்வி பயத்தில் அவருக்குத்தான் தூக்கம் வரவில்லை கடும் நிதி நெருக்கடியில் கூட திமுக அரசு 3 ஆண்டுகளில்| பல திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு வெள்ள நிவாரணம் கூட தர மறுக்கிறது என பேசினார்.
நாற்பதுக்கு நாற்பதையும் நிச்சயம் வெல்வோம். பாசிச பாஜக ஆட்சியை வீழ்த்தி ஒன்றியத்தில் இந்தியா கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தவே இந்த தேர்தல். 10 ஆண்டுகாலம் ஆட்சி செய்த பிரதமரால் தமிழகத்திற்கு செய்த ஒரு திட்டத்தை கூட சொல்ல முடியவில்லை. தமிழகத்திற்கு செய்த சிறப்பு திட்டங்களை பிரதமர் மோடியால் பட்டியலிட முடியுமா? என்று குறிப்பிட்டார்.
மேலும், பிரதமர் அவர்களே தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் , தமிழ்நாட்டின் மீதும் உங்களுக்கு ஏன் இவ்வளவு வெறுப்பு. தமிழ்நாட்டு விரோதமாக எல்லாவற்றையும் செய்துவிட்டு, தமிழ்தான் மூத்தமொழி என பிரதமர் நீலிக்கண்ணீர் வடிக்கிறார். சமஸ்கிருத வளர்ச்சிக்கு நீங்கள் கொடுத்த நிதி எவ்வளவு?. தமிழ் வளர்ச்சிக்கு நீங்கள் கொடுத்த நிதி எவ்வளவு?. இதை கூச்சமில்லாமல் தமிழ்நாட்டுக்கு வந்து அவர் சொல்வாரா? என்று சரமாரியாக அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.