செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா - அரங்கில் கருணாநிதி உடன் இடம்பெற்ற ஜெயலலிதா படம்!
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா அரங்கில் முன்னாள் முதல்வர் படங்களுடன் ஜெயலலிதா படமும் இடம்பெற்றுள்ளது.
செஸ் நிறைவு விழா
இந்தியாவிலேயே முதல்முறையாகத் தலைநகர் சென்னையில் கடந்த ஜூலை 28ஆம் தேதி தொடங்கிய இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகள், மாமல்லபுரத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்று முடிந்தது வெளிநாடுகளில் இருந்து அதிகப்படியான வீரர்கள் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் கலந்து கொண்டனர்.
மொத்தம் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வீரர்- வீராங்கனைகள் இந்தத் தொடரில் கலந்து கொண்டனர். அதேபோல இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் இந்தியா சார்பில் மொத்தம் ஆறு அணிகள் களமிறங்கின.
தமிழகத்தின் சிறப்புகள்
இந்திய அணிகளில் குறைந்தது ஒரு அணியாவது பதக்கம் வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. இதில் இந்திய அணி சார்பில் கலந்து கொண்டவர்கள் பல்வேறு பதக்கங்களை வென்றுள்ளனர். ஓபன் மற்றும் மகளிர் பிரிவுகளில் இந்தியா வெண்கல பதக்கத்தை வென்றது.
இதில் செஸ் ஒலிம்பியாட்டில் வெற்றி பெற்ற வீரர்- வீராங்கனைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதக்கங்களை வழங்க உள்ளார். அங்கு மேடையில் அமைக்கப்பட்டுள்ள திரையில் தமிழகத்தின் சிறப்புகள் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படம்
அதில் முன்னாள் முதல்வர்களான அண்ணா, கருணாநிதி படம் மட்டுமின்றி அதிமுக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் படமும் இடம் பெற்று உள்ளது.
வழக்கமாக இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எந்தக் கட்சி ஆளும் கட்சியாக உள்ளதோ அந்தக் கட்சியின் தலைவர்களின் படங்கள் மட்டுமே இடம் பெறும். ஆனால், செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படமும் அவர் குறித்த தகவல்களும் இடம்பெறுகின்றன.