செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா- ஓடிடி நிறுவனங்களுக்கு அழைப்பு
செஸ் ஒலிம்பியாட் போட்டியின் நிறைவு நிகழ்ச்சியை ஒளிபரப்ப ஓடிடி நிறுவனங்களுக்கு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
செஸ் ஒலிம்பியாட்
கடந்த மாதம் ஜூலை 28 ஆம் தேதி 44ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி மிக விமர்சையாக தொடங்கியது. இதற்காக நேப்பியர் பாலம் முதல் அரசு பேருந்து வரை என பல இடங்களிலும் செஸ் ஒலிம்பியாடின் விளம்பர பலகைகள் இடம் பெற்றது.

மேலும் இந்நிகழ்ச்சியில் தமிழர்களின் பாரம்பரிய கலைகள் மற்றும் நடனங்கள் பறைசாற்றப்பட்டது. தமிழகத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் 44 ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சுமார் 187 நாடுகள் கலந்துக்கொண்டுள்ளது.
நிறைவு விழா
அதில் பொதுப்பிரிவில் 189 அணிகள் மற்றும் பெண்கள் பிரிவில் 154 அணிகள் என பதிவு செய்துள்ளனர். செஸ் போட்டியில் வீரர், வீராங்கனைகளை உற்சாகப்படுத்துவதற்காக நாள்தோறும் கலை நிகழ்ச்சிகளும் அரங்கேறி வருகின்றன.

போட்டியாளர்கள் அனைவரும் வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களுக்கென பல வகையான உணவு தயாரிக்கபட்டு வழங்கபட்டு வருகிறது . இந்நிலையில் ஒலிம்பியாட் போட்டி வருகின்ற ஆகஸ்ட் 9 ஆம் தேதியுடன் நிறைவுபெற உள்ளதால் அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
ஓடிடி-க்கு அழைப்பு
மேலும் போட்டியின் நிறைவு விழா நிகழ்ச்சிகளை வெளியிட ஊடகம் மற்றும் ஓடிடி நிறுவனங்களுக்கு மாநில விளையாட்டு மேம்பாட்டு வாரியம் அழைப்பு விடுத்துள்ளது.