செஸ் ஒலிம்பியாட் விழிப்புணர்வு பேருந்துகளை துவக்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்..!
மாமல்லபுரத்தில் சர்வதேச 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28 ஆம் தேதி துவங்க உள்ளது. இப்போட்டிகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செஸ் ஒலிம்பியாட் குறித்த வாசகங்கள் பொறிக்கப்பட்ட 15 பேருந்துகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
செஸ் ஒலிம்பியாட்
44-வது செஸ் ஒலிம்பியாட் -2022 போட்டி மாமல்லபுரத்தில் வரும் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெற உள்ளது.
இந்த போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.
இந்த ஒலிம்பியாட் போட்டியின் இலச்சினை மற்றும் சின்னத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த மாதம் 9-ம் தேதி அறிமுகப்படுத்தினார்.
பேருந்துகளில் விழிப்புணர்வு
இந்த போட்டி குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 5 மாநகர பேருந்துகளிலும், 10 வெளி மாநில மற்றும் மாவட்ட பேருந்துகளிலும் செஸ் ஒலிம்பியாட் இலச்சினை மற்றும் சின்னத்துடன்,
“நம்ம செஸ், நம்ம பெருமை” “இது நம்ம சென்னை, நம்ம செஸ்” “வணக்கம் செஸ், வணக்கம் தமிழ்நாடு” போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
தொடங்கி வைத்தார் முதலமைச்சர்
சென்னை மெரீனாவில் இந்த 15 பேருந்துகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என். நேரு, எஸ். எஸ். சிவசங்கர், மெய்யநாதன், தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.