இங்க இருந்த கோயிலை காணோம் - புதிதாய் கட்டித்தர அறநிலையத்துறை சம்மதம்!
விநாயகர் கோயிலை காணவில்லை என வழக்கு தொடரப்பட்டுள்ளது.
கோவிலை காணோம்..
சென்னை என்எஸ்சி போஸ் சாலையில் இருந்த விநாயகர் கோயிலை காணவில்லை என மேற்கு மாம்பலத்தை சேர்ந்த ஆர்.சந்திரசேகர் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், ``சென்னை பாரிமுனை என்எஸ்சி போஸ் சாலையில், செல்வ சுந்தர விநாயகர் கோயில் பல ஆண்டுகளாக இருந்தது. 14.5 சதுர மீட்டர் பரப்பில் உள்ள இந்த கோயிலுக்கு பட்டா மற்றும் வரைபடங்கள் உள்ளன.
இந்த கோயிலுக்கு சொந்தமான கடை 1975-ம் ஆண்டு முதல் ரூ.75 மாத வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இந்தக்கோயிலில் உண்டியலும் இருந்துள்ளது. திடீரென மாநகராட்சி நிர்வாகம் இந்தக்கோயிலை இடித்து அப்புறப்படுத்திவிட்டு அந்த இடத்தில் குப்பைத்தொட்டிகளை வைத்துள்ளது.
அறநிலையத்துறை சம்மதம்
அந்த குப்பைத்தொட்டிகளை அகற்றிவிட்டு அதே இடத்தில் கோயிலை கட்டித்தர உத்தரவிட வேண்டும்'' எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது ஷபீக் ஆகியோர் அடங்கிய அமர்வு,
``கோயில் இருந்த இடத்துக்கு முறையான ஆவணங்கள் உள்ளன. ஆனால் கோயிலைத்தான் காணவில்லை என இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்தக் கோயில் எப்போது இடித்து தரைமட்டமாக்கப்பட்டது'' என கேள்வி எழுப்பினர்.
அதற்கு மாநகராட்சி மற்றும் அறநிலையத்துறை தரப்பில் என்எஸ்சி போஸ் சாலையில் அதே இடத்தில் மீண்டும் புதிதாக கோயில் கட்டித்தரப்படும் என உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது.