இன்னும் 3 மாசம் தான்? சென்னை வரும் மிக பெரிய ஆபத்து - அதிரவைக்கும் ரிப்போர்ட்
சென்னையில் நவம்பர் - டிசம்பர் மாத மழை என்பது ஒரு கேட்டகனாகவே உள்ளது.
பருவமழை ஆபத்து
சென்னையில் நடந்து வரும் பல்வேறு கட்டுமான பணிகளால் பருவமழை ஏற்படும் போது பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. சென்னையின் 15 மண்டலங்களில் 7 மண்டலங்களில் பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெறுகிறது. குறிப்பாக மெட்ரோ பணிகளின் காரணமாக, பல்வேறு இடங்களில் மழைநீர் வடிகால் சேதமடைந்த காணப்படுகின்றன.
குறிப்பாக சென்னை மாதவரம், திரு.வி.க நகர், அண்ணா நகர், வளசரவாக்கம், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை, சோழிங்கநல்லூர் பகுதிகளில் மழை நீர் வடிகால் பகுதிகளில் துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. இதே போல OMR மற்றும் ரெடியல் ரோடு இணையும் துரைப்பாக்கம் பகுதியில் பல்வேறு இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெறுகிறது.
இதன் காரணமாக, மத்திய கைலாஷ் சந்திப்பில் இருந்து சிறுசேரி வரை 110 அடி அகல மழைநீர் வடிகாலில் அடைப்புகள் ஏற்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி மாதவரம் பால் பண்ணை சாலை, ஜவாஹர்லால் நேரு சாலை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மில்லர்ஸ் ரோடு, புரசைவாக்கம் ஹை ரோடு, பர்னபி ரோடு போன்ற பகுதிகளிலும் பெரிய சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மெட்ரோ பணிகளால் ஓட்டேரி கால்வாய் அமைந்துள்ள பகுதியில் 250 மீட்டருக்கு பழைய கால்வாயை நீக்கவேண்டிய சூழல் உண்டாகியிருக்கிறது. மெட்ரோ பணி மட்டுமின்றி சென்னையில் மேம்பால சாலை பணிகளும் வேகமெடுத்துள்ளன. சுமார் 5800 கோடி ரூபாயில் மதுரவாயலில் இருந்து சென்னை துறைமுகம் வரை சுமார் 20.56 கிலோமீட்டருக்கு பணிகள் நடைபெறுகின்றன.
இதற்காக சென்னை கூவத்தில் 650 தூண்கள், 11 வெளியேற்றுங்கள், நுழைவு பாதைகளுடன் ராட்சத தூண் போன்றவற்றால் பல இடங்களில் கூவம் ஆற்றில் மண் கொட்டப்பட்டுள்ளது. பல அடைப்புகள் உண்டாகியுள்ளது. பரப்பளவு சுருங்கியுள்ளதால், நீர் தேங்கி பெரிய பாதிப்பு ஏற்படும் சூழல் உண்டாகியிருக்கிறது.
அதே போல, அங்கங்கே குடிநீர்வடிகால் பணிகள், மின்வாரிய கம்பிகள் புதைக்கும் பணிகள் நடைபெறுவதால், நீர்வழி தடங்கள் அடைப்புகள் உண்டாகியுள்ளது.
இவை துரிதப்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறும் நிலையிலும், இன்னும் 3 மாதத்தில் பருவமழை துவங்குவதால், சென்னை தாக்குப்பிடிக்குமா? என்ற பயம் உண்டாகியிருக்கிறது.