16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் வெளுத்து வாங்கப்போகும் மழை - வானிலை ஆய்வு மையம் தகவல்!
தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம்
தமிழ்நாட்டில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த தகவலின்படி, "தெற்கு வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், அரியலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மட்டும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று தெரிவித்துள்ளனர்.
சூறாவளி காற்று
தொடர்ந்து, "தமிழகத்தில் இன்றும் நாளையும் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி முதல் 48 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 24 நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்று முதல் வரும் 21-ம் தேதி வரை லட்சத்தீவு பகுதிகள், கேரளா, கர்நாடகா கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோமீட்டர் வேகத்திலும் வீசப்படும்.
இதனால் மீனவர்கள் இப்போதைக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.