நான் பேசும்போது குறுக்கப் பேசாதீங்க; அமைதியா இருங்க - கொந்தளித்த மேயர் பிரியா!
மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் மேயர் பிரியா கோபமாக பேசிய சம்பவம் வாயடைக்கச் செய்துள்ளது.
மாமன்றக் கூட்டம்
சென்னை மாநகராட்சியின் மாமன்றக் கூட்டம் மேயர் பிரியா தலைமையில் ரிப்பன் கட்டட மாமன்றக் கூட்டரங்கில் நடைபெற்றது. இதில், துணை மேயர் மகேஸ் குமார், மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன், நிலைக்குழுத் தலைவர்கள்,
மண்டலக் குழுத் தலைவர்கள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து நடந்த கேள்வி நேரத்தின்போது பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்கள் தங்கள் வார்டுகள், மண்டலங்களிலுள்ள பிரச்னைகள் மற்றும் தங்களுக்கு இருக்கும் கோரிக்கைகள் குறித்துப் பேசினர்.
கோபத்தில் பிரியா
அப்போது, அதிமுக கவுன்சிலர் ஜே.ஜான் (வார்டு 84), ``எங்கள் வார்டிலுள்ள விநாயகர் கோயில் சாலை பழுதாகி குண்டும்குழியுமாகக் கிடக்கின்றன. பல ஆண்டுகளாகப் பலமுறை கோரிக்கை வைத்தும் புதிய சாலை போடப்படவில்லை என பேசியபோது, திமுக கவுன்சிலர் எழுந்து, உங்கள் ஆட்சியில் என்ன செய்துகொண்டிருந்தீர்கள்? அதிமுக ஆட்சியில் தான் சாலை போடாமல் விட்டீர்கள் என கேள்வி எழுப்பினார்.
இதனால் ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே, மேயர் பிரியா, இதற்கு முன்பிருந்த அதிமுக ஆட்சியில் மாமன்றக் கூட்டத்தில் பேசுவதற்கு திமுக-வினருக்கு வாய்ப்புகள் வழங்கப்படாது.
ஆனால், இந்த ஆட்சியில் ஆரம்பத்திலிருந்தே அனைவருக்கும் வாய்ப்பு வழங்கப்படுகிறது என பேசிக்கொண்டிருக்கையில், அவர் குறுக்கிட்டதால் நான் பேசும்போது குறுக்கப் பேசாதீங்க! ஒரு நிமிஷம் எல்லாரும் அமைதியா இருக்கீங்களா?" என கையை உயர்த்தி பிரியா கோபத்துடன் கூறினார். தொடர்ந்து அனைவரும் அமைதியாக அமர்ந்தனர்.