அண்ணா சாலை சுவர் இடிந்து விழுந்து பெண் பலி; விசாரணை நடத்தப்படும் - மேயர் பிரியா
அண்ணா சாலை சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என சென்னை மேயர் பிரியா தெரிவித்துள்ளார்.
அண்ணா சாலை விபத்து
சென்னை மாநகராட்சி சார்பில் திருவிக நகர் மண்டலம் ஓட்டேரி நல்லா கால்வாயில் இன்று ட்ரோன் இயந்திரங்களைக் கொண்டு மேற்கொள்ளப்படும் கொசு ஒழிப்பு பணி நடைபெற்றது. இதனை இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு மற்றும் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் இரண்டு ட்ரோன்கள் மூலமாக கால்வாய்களில் கொசுக்கள் ஒழிக்கும் நிகழ்ச்சியை அமைச்சர் சேகர்பாபு கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த மேயர், புதிதாக இந்த ஆண்டு சி.எஸ்.ஆர் நிதி ஒதுக்கீட்டின் மூலம் ரூ.81 லட்சம் மதிப்பில் 6 ட்ரோன்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும்,
மேயர் உறுதி
மனிதர்களால் சென்று தெளிக்க முடியாத பகுதிகளில் இந்த ட்ரோன்கள் மூலம் மருந்துகள் தெளிக்கப்படும். அண்ணா சாலையில் கட்டட இடிப்பின் போது பெண் ஒருவர் பலியானது குறித்த கேள்விக்கு பதில் அளித்த மேயர், கட்டடம் இடிப்பதற்கு சென்னை மாநகராட்சியிடம் அனுமதி பெறப்பட்டு அண்ணா சாலையில் கட்டட இடிப்பு நடைபெற்றது.
ஆனால் மாநகராட்சி பிறப்பித்த நெறிமுறைகளை அவர்கள் பயன்படுத்தவில்லை. அதனால் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி சார்பாக நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த கட்டட இடிப்பை நிறுத்தி வைத்துள்ளார்கள்.
இனிமேல் இந்த மாதிரியான விபத்துக்கள் நடக்காதவாறு மாநகராட்சி பார்த்துக் கொள்ளும். இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.