ரயிலில் இருந்து தவறி விழுந்த நண்பன் - காப்பாற்ற சென்ற இளைஞர் பலியான சோகம்
ரயிலில் தவறி விழுந்த நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவறி விழுந்த நண்பன்
திருப்பத்தூர், புதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் கவுதம்(22). இவரது நண்பர் சுனில் என்பவரை சிங்கப்பூருக்கு வழியனுப்பி வைப்பதற்காக, மற்றொரு நண்பர் அதே பகுதியைச் சேர்ந்த ஆசைத்தம்பி(24) உட்பட 4 பேர் காரில் குரோம்பேட்டைக்கு வந்துள்ளனர்.
தொடர்ந்து, மின்சார ரயிலில் கடற்கரைக்குச் சென்று நேரம் செலவிட்டுள்ளனர். அதன்பின், திருவல்லிக்கேணியில் மின்சார ரயிலில் ஏறி, பூங்கா நிலையம் வந்துள்ளனர். அங்கிருந்து 4 பேரும் தாம்பரம் செல்லும் ரயிலில் ஏறியுள்ளனர்.
பரிதாப பலி
ரயில் சைதாப்பேட்டை ரயில் நிலையம் அருகே வந்தபோது, படிக்கட்டு பகுதியில் நின்றிருந்த ஆசைத்தம்பி திடீரென தவறிகிழே விழுந்தார். அப்போது, கவுதம், நண்பரைக் காப்பாற்ற தண்டவாளத்தில் இறங்கி பின்னோக்கி ஓடியுள்ளார்.
அப்போது, தாம்பரத்திலிருந்து கடற்கரை நோக்கிச் சென்ற மின்சார ரயில் அவர் மீது மோதி தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தார்.
அதனையடுத்து, உடனே ரயில்வே போலீஸார் அவரை மீட்டு பரிசோதித்ததில் உயிரிழந்தது தெரியவந்தது. காயமடைந்த ஆசைத்தம்பி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.