படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன் தவறி விழுந்த பரிதாபம்
அரசுப் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்த மாணவன் தவறி விழுந்தான்.
படிக்கட்டில் பயணம்
செங்கல்பட்டு மாவட்டம்,மேல்மருவத்துார் அருகே சோத்துப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த மாணவன் ஒருவர் அச்சரப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளயில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இன்று வழக்கம் போல் மாணவன் பள்ளிக்கு செல்வதற்காக பேருந்து நிலையத்தில் காத்துக்கொண்டுள்ளார். அப்போது செய்யூரில் இருந்து வந்த தடம் எண் 19 என்ற அரசு பேருந்து வந்துள்ளது.
அதில் கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. இதனால் மாணவர் படியில் தொங்கியபடி பயணம் செய்துள்ளார். அப்போது சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்த போது மாணவன் படியில் இருந்து தவறி விழுந்துள்ளான்.
கீழே விழுந்ததில் பேருந்தின் தகடு மாணவனின் இடது கையை கிழித்துள்ளது. இதனால் காயம் அடைந்த மாணவனுக்கு 8 தையல் போடப்பட்டுள்ளது.
கூடுதல் பேருந்து இயக்க கோரிக்கை
இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில் மாணவனுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். செய்யூர் - மேல்மருவத்துார் இடையே காலை நேரத்தில் ஒரு பேருந்து மட்டுமே இயக்கப்படுவதால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்வோர் கடும் அவதியுறுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
எனவே இந்த வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
நேற்று மதுரையில் படியில் தொங்கிய மாணவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.