அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைத்ததா? உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செந்தில் பாலாஜி
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டு , புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில் அடைக்கப்படுவதற்கு முன்னர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அவருக்கு இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
சிகிச்சைக்கு பின்னர் செந்தில் பாலாஜியை, அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இதனைடுத்து மருத்துவக் காரணங்களுக்காக ஜாமீன் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி தரப்பில் பலமுறை சென்னை முதன்மை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஜாமீன் மனு தள்ளுபடி
ஆனால் தொடர்ந்து ஜாமீன் மறுக்கப்பட்டு, அவரின் நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டு வந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த 10ம் தேதி மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அவரது சார்பில் ஜாமின் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான வாதங்கள் நிறைவுற்ற நிலையில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
மேலும், மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் கோருவதை ஏற்க முடியாது என்றும் அவரது சகோதரர் இன்னும் தலைமறைவாக இருக்கும் நிலையில் ஜாமின் வழங்க இயலாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.