ரேஷன் கடையில் கள் விற்பனை - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!
கள் விற்பனை தொடர்பாக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.
கள் விற்பனை
சென்னையைச் சேர்ந்த ஐ.டி. ஊழியர் முரளிதரன் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அதில், டாஸ்மாக்–கில் முறைகேடு நடைபெறுவதாகவும், டாஸ்மாக் கடைகளில் பாட்டில்களுக்கு 10 ரூபாய் முதல் 50 ரூபாய் வரை அதிகம் விற்பனை செய்வதாகவும்,
இதன்மூலம் கிடைக்கும் கோடிக்கணக்கான ரூபாயை டாஸ்மாக் கடை விற்பனையாளர், மேலாளர் பகிர்ந்து கொள்வதாகவும் குற்றம் சாட்டி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார். மேலும், மதுபான பாட்டில்களில் விற்பனை விலையை விட கூடுதல் விலை கொடுக்க வேண்டாம் என எல்லா டாஸ்மாக் கடைகளிலும்
அறிவிப்பு பலகை வைக்க உத்தரவிட வேண்டும் எனவும், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் எனவும், மதுபானங்களை நாடு முழுவதும் உள்ள நிறுவனங்களிடம் இருந்து வாங்கி, சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
உயர்நீதிமன்றம்
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து அரசு ஏன் மறுபரிசீலனை செய்யக் கூடாது என கேள்வி எழுப்பியிருந்தது.இந்த நிலையில், இவ்வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி குமரேஷ் பாபு அமர்வு முன் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கள் விற்பனைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்குவது, மாநில அரசின் கொள்கை முடிவு எனவும் இது தொடர்பாக உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமர்வு ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும் அரசு பிளீடர் எட்வின்பிரபாகர் தெரிவித்தார். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், கள் விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கவேண்டும்;
சூப்பர் மார்க்கெட்கள், ரேஷன் கடைகளில் மதுபானம் விற்க அனுமதி கோரி மனுதாரர் அளித்த விண்ணப்பத்தை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டனர்.
அதுமட்டுமல்லாமல், டாஸ்மாக் மதுபான கடைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாக மனுவில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை எட்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.