சென்னை : கலைவாணர் அரங்கில் நடைபெற்று வரும் மலர் கண்காட்சி இன்றுடன் நிறைவு!
சென்னை கலைவாணர் அரங்கின் நடைபெற்று வரும் மலர் கண்காட்சியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது நேரில் சென்று பார்வையிட்டார்.
மலர் கண்காட்சி
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3-ம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இதற்காக தமிழக அரசு சார்பாக ஜூன் 3-ம் தேதி முதல் 5-ம் தேதி வரை சென்னை கலைவாணர் அரங்கில் மலர் கண்காட்சி நடத்தப்பட்டது.
இந்த கண்காட்சியை கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருவல்லிக்கேனி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார்.
சென்னையில் முதன் முறையாக நடைபெறும் மலர் கண்காட்சி என்பதனால் ஊட்டி, ஓசூர், திண்டுக்கல், பெங்களூரு, புனே போன்ற பல்வேறு இடங்களில் இருந்து சுமார் 200-க்கும் மேற்பட்ட கண்களை கவரும் பூக்களின் வகைகளான 4 லட்சம் மலர்கள் கொண்டு வரப்பட்டது.
தலைவர்களின் உருவங்கள்
மேலும், பழங்களால் செதுக்கப்பட்ட கவிஞர் பாரதியார், முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் முகங்கள் சிற்பங்களும், தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முகத்தை போல் செதுக்கப்பட்ட பழமும் இந்த மலர் கண்காட்சியில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது.
இன்றுடன் நிறைவு
காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்று வந்த இந்த கண்காட்சியை மாணவர்கள் 20 ரூபாயும் பெரியவர்கள் 50 ரூபாயும் கட்டணமாக செலுத்தி பார்த்து ரசித்து வந்த நிலையில் இன்றுடன் இந்த கண்காட்சி நிறைவு பெறுகிறது.
சென்னையில் மலர் கண்காட்சி நடப்பது இதுவே முதன்முறை என்பதால் விடுமுறை நாளான இன்று ஆயிரக்கணக்கான மக்கள் பார்வையிட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.