சென்னை நிறுவன சொட்டு மருந்து - அமெரிக்காவில் பலி, பார்வை இழப்பு!
சென்னை நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கண் சொட்டு மருந்து
சென்னையைச் சேர்ந்த `குளோபல் பார்மா ஹெல்த்கேர்’ நிறுவனம் தயாரித்து, அமெரிக்கச் சந்தைக்கு விநியோகித்துள்ள செயற்கை கண்ணீர் கண் சொட்டு மருந்து, எஸ்ரிகேர் (EzriCare). `இம்மருந்து drug-resistant பாக்டீரியாவால் மாசுப்பட்டிருக்கிறது.
இதனைப் பயன்படுத்துகையில், நிரந்தர பார்வை இழப்பு மற்றும் இரத்த ஓட்டத்தில் உண்டாகும் தொற்று காரணமாக இறப்பு ஏற்படலாம்’ என அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனால், அமெரிக்காவில் ஒருவர் மரணமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
அமெரிக்காவில் பலி
கண்களில் நேரடியாக நோய்த்தொற்று ஏற்பட்ட 11 நோயாளிகளில் குறைந்தது 5 பேர் பார்வையை இழந்துள்ளனர். `எனவே எஸ்ரிகேர் ஆர்டிபிசியல் கண் சொட்டு மருந்து அல்லது டெல்சம் பார்மாவின் செயற்கை கண் சொட்டு மருந்தை வாங்கவோ, பயன்படுத்தவோ வேண்டாம்’ என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து, ’குளோபல் பார்மா ஹெல்த்கேர்’ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ``சாத்தியமான மாசுபாடு காரணமாக, எஸ்ரிகேர் ஆர்டிஃபிஷியல் டியர்ஸ் கண் சொட்டு மருந்து, அல்லது டெல்சம் பார்மா மூலம் அனைத்து இடங்களிலும் விநியோகிக்கப்படும் மருந்துகளை தானாக முன்வந்து திரும்பப் பெறுகிறோம்’’ எனத் தெரிவித்துள்ளது.