இந்தப் படத்தை 10முறை பார்த்துதான் கொள்ளையடித்தேன் - அரும்பாக்கம் கொள்ளை வழக்கில் அதிர்ச்சி வாக்குமூலம்!
அரும்பாக்கம் வங்கி கொள்ளை வழக்கில், கொள்ளையன் முருகன், விசாரணையில் அதிர்ச்சி வாக்குமூலம் ஒன்றை அளித்துள்ளார்.
வங்கி கொள்ளை
சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள பெடரல் வங்கி கிளையில் பட்டப்பகலில் காவலாளிக்கு குளிர்பானம் கொடுத்தும், ஊழியர்களை கட்டிப்போட்டும் 32 கிலோ நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதில் ஈடுபட்ட முக்கிய நபர் முருகன், உள்பட அனைத்து குற்றவாளிகளையும் காவல்துறை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களிடம் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட 32 கிலோ நகைகளையும் போலீசார் மீட்டனர்.
ஜென்டில்மேன் படம்
இந்நிலையில், கைது செய்யப்பட்ட முருகன் பல திடுக்கிடும் வாக்குமூலத்தை அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், ’அரும்பாக்கம் வங்கியில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தேன்.
எனக்கு வங்கியில் எந்த இடத்தில் நகைகள் வைக்கப்பட்டிருக்கும் என்று நன்றாகவே தெரியும். வங்கியில் கொள்ளையடிப்பதற்காக ஜென்டில்மேன் படத்தை தொடர்ந்து 10 முறை பார்த்தேன்.
ரகசிய திட்டம்
பெரிய பணக்காரன் ஆக வேண்டும் என்ற நோக்கத்தில், வங்கியில் கொள்ளையடிப்பதற்காக நண்பர்களுடன் இணைந்து ஒரு மாதம் ரகசிய திட்டமிட்டேன். கொள்ளைக்கு தேவையான பைக், கார்கள் தேவைப்பட்டதால் நண்பர்களிடம் உதவி கேட்டேன்.
அவர்களும் உதவினர். அரும்பாக்கம் வங்கியைத் தவிர மற்ற வங்கியிலும் கொள்ளையடிக்க திட்டமிட்டிருந்தோம்” என தெரிவித்துள்ளார். முன்பாக வலிமை படத்தில் வரும் வசனத்தை முருகன் தனது வாட்ஸ் அப் ஸ்டேட்டசாக வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.