கவனம் ஈர்க்கும் செங்கல்பட்டு ஆட்சியர் - யார் இவர்? என்ன செய்துள்ளார்?
2019 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் செங்கல்பட்டு மாவட்டம் புதியதாக உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் 37-ஆவது மாவட்டமாக அறிவிக்கப்பட்டது.
செங்கல்பட்டு
சுதந்திர இந்தியாவுக்கு முன்பு செங்கல்பட்டு நகரத்தை தலைமை இடமாகக் கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட நீதிமன்றங்கள் செயல்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை விமான நிலையம் வரை பரப்பளவில் மிக பெரிதாக இருந்ததால், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரித்து நிறுவப்பட்டது.
இந்த மாவட்டத்தில் மதுராந்தகம், தாம்பரம் ஆகிய வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருப்போரூர், தாம்பரம், திருக்கழுக்குன்றம் பல்லாவரம், வண்டலூர் என 8 தாலுகாக்கள் இடம்பெற்றுள்ளன.
3 வருவாய் கோட்டங்கள், 8 வருவாய் வட்டங்கள், 40 குறுவட்டங்கள் மற்றும் 636 வருவாய் கிராமங்களைக் கொண்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்
முதல் மாவட்ட ஆட்சியராக அ.ஜான்லூயிஸ் பொறுப்பேற்று ஒன்றரை ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் அவர் தமிழக அரசின் உள்துறை இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டார். பொதுத்துறை இணை செயலாளராக இருந்த ஏ.ஆர் ராகுல்நாத் 2வது மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்றார்.
தொடர்ந்து 3வது புதிய மாவட்ட ஆட்சியராக எஸ். அருண்ராஜ் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர்தான் படு ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி மதுவிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி பேரணையாக நடந்து சென்றனர்.
இதில் அருண்ராஜ் கலந்துகொண்டு, சுமார் இரண்டு கிலோமீட்டர் தூரம் நடந்து வந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பொதுவாக விழிப்புணர்வு பேரணிகளை மாவட்ட ஆட்சியர்கள் அல்லது அரசு துறை அலுவலர்கள் துவக்கி வைப்பது மட்டுமே வழக்கம். இந்நிலையில் அதில் ஆட்சியர் கலந்துக்கொண்டது பெரும் வரவேற்பை பெற்றது.
மேலும், வாட்ஸ் அப்பில் வந்த மனு ஒன்றுக்கு அருண்ராஜ் நேரில் சென்று வீட்டு மனை பட்டா வழங்கி இரண்டு மாதங்களில் ஊரக வளர்ச்சித் துறை மூலம் வீடு கட்டி தர வட்டார வளர்ச்சி அலுவலருக்கு உத்தர விட்டார். மின்சார அடுப்பு மற்றும் சமைப்பதற்கு மின்சார குக்கர் ஆகியவற்றையும் வழங்கினார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு, விரலில் மை இருந்தால் மறுநாள் உணவகங்களில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என அறிவித்திருந்தார். 100 சதவீத வாக்குப்பதிவு செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
அண்மையில் கோவளத்தில் ஹெலிகாப்டர் சுற்றுலா சேவைக்கு தடை விதித்தார். சுற்றுலா பயணிகளுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாமல் ஹெலிகாப்டரை இயக்கியதால் தடை விதிக்கப்பட்டள்ளதாக அறிவிக்கப்பட்டது. இவ்வாறு மக்கள் நலனை கருத்தில் கொண்டு செயல்பட்டு வருவதால் பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.