அரசு பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலப்பு? - போலீசார் தீவிர விசாரணை!
கரூர் அரசு பள்ளியில் உள்ள குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலந்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரசு பள்ளி
கரூர் மாவட்டம், சிந்தாமணிப்பட்டியை அடுத்துள்ள வீரணம்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை சுமார் 160க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர்.
இங்கு நேற்று காலை 10:30 மணி அளவில் மர்ம நபர்கள் பள்ளி வளாகத்திற்குள் புகுந்து அங்குள்ள பூந்தொட்டிகளை உடைத்ததோடு கழிவறையின் பூட்டை உடைத்து அங்குள்ள சோப்ஆயில் பினாயில் உள்ளிட்ட கெமிக்கல்களை எடுத்து மாணவர்கள் குடிநீர் தொட்டிகளில் கலந்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த தலைமை ஆசிரியர் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளித்தனர்.
போலீசர் விசாரணை
இதனை தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிந்தாமணிபட்டி காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், கைரேகை நிபுணர்களும், அதிகாரிகளும் வந்து பள்ளி குடிநீர் தொட்டியில் கெமிக்கல் கலந்த நபர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
சுகாதாரத்துறை அதிகாரிகள் குடிநீர் தொட்டியில் உள்ள நீரின் மாதிரியைச் சேகரித்து ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர். வட்டாட்சியர் முனிராஜ் தலைமையில் ஆய்வு செய்யப்பட்டதில், சோப் ஆயில் கலக்கப்பட்டது தெரிய வந்தது. மேலும் பள்ளியில் உள்ள 3 தொட்டிகளிலும் கெமிக்கல் கலந்துள்ளதாக தெரியவந்தது. மேலும், சம்பவ இடத்தில் மாவட்ட எஸ்.பி, சரக டி.எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.